×
Saravana Stores

காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் 11 ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு: கலெக்டரிடம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் 11 ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனை, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் காஞ்சிபுரம் தொகுதி தலைவர் இ.லாரன்ஸ், செயலாளர் எம்.ஆறுமுகம் ஆகியோர் நேற்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசும், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகமும், காஞ்சிபுரம் மாநகராட்சியை விரிவாக்கம் செய்வதற்கு 11 ஊராட்சியில் உள்ள குக்கிராமங்களை இணைக்கும் பட்டியலை சமீபத்தில் அரசு இதழில் வெளியிட்டது. அவ்வாறு, இணைக்கும் பொழுது பல்வேறு சிக்கல்கள் கிராமங்களில் உள்ள மக்களுக்கும், விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. விவசாய ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும், சுமார் 300 ஏக்கர் விவசாய நிலங்கள் விவசாயிகள் பயிர்செய்து வருகிறார்கள்.

ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரிகளும், குளங்களும், குட்டைகளும் பல கிலோமீட்டர் உள்ள நீர்வரத்து கால்வாய்களும் உள்ளன. இவை அனைத்தையும் நம்பி ஆடுகள் மாடுகள் கால்நடைகள் வாழ்கின்றன. இவைகளை மாநகராட்சியால் தரம் உயர்த்தும்போது, இவை அனைத்தும் பாதிக்கப்படும் இவை அனைத்தையும் அழித்துவிட்டு காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தி என்ன செய்யப்போகிறோம்.

காஞ்சிபுரம் மாநகராட்சி விரிவாக்கத்தில் கிராமங்கள் அனைத்தும் பாதிக்கப்படும் கிராமங்களில் குறைந்தது 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் நம்பி வாழ்ந்து வருகிறார்கள். 11 ஊராட்சிகளில் இந்த வேலையை நம்பி குறிப்பாக பெண்கள், முதியோர், மாற்றுத்திறனாளி, கணவனால் கைவிடப்பட்டோர், விதவைகள் இந்த வேலையை நம்பி வாழ்ந்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் ஏரிகள் குளங்கள் குட்டைகள் பொது சொத்துக்கள், கால்நடைகள், நீர்நிலைகள் பாதுகாப்பது விவசாயிகளையும், தொழிலாளிகளையும் அதன் தொடர்புடைய கால்நடைகள் அனைத்தையும் இந்த 100 நாள் வேலை பணி ஆட்கள் தான் பாதுகாக்கப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட அனைத்தும் கிராமப்புற ஊராட்சியால் 100 நாள் வேலை திட்டத்தினை மட்டும் தான் பாதுகாக்க முடியும் விவசாயத்தையும், விவசாய நிலத்தையும் இழந்து மாநகராட்சியாய் இணைத்து விரிவாக்கம் செய்து என்ன முன்னேற்றம் காணப்போகிறோம். உதாரணத்திற்கு ஏற்கனவே இணைக்கப்பட்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நத்தப்பேட்டை போன்ற கிராமங்களில் இன்று வரை மக்கள் வேதனையோடு பல்வேறு புலம்பலுக்கு ஆளாகி வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

மேலும், கிராமங்களை இணைத்து கிராமங்கள் வளர்ச்சியை தடுக்க வேண்டாம். அந்த வகையில் 1.கருப்படை தட்டடை 2.வையாவூர் 3.களியனூர் 4.சிறு காவேரிப்பாக்கம் 5.கீழ் அம்பி 6.கீழ் கதிர்பூர் 7. கோனேரி குப்பம் 8.திருப்பருத்திகுன்றம் 9.திம்ம சமுத்திரம் 10.புத்தேரி 11.ஏனாத்தூர் ஆகிய ஊராட்சிகளை மாநகராட்சியில் இணைத்து விரிவாக்கம் செய்வதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், எதிர்ப்பு தெரிவிக்கிறது என்பதை தமிழக அரசுக்கும், மாவட்ட ஆட்சி நிர்வாகத்திற்கும் தெரிவித்துக்கொள்கிறோம். எனவே, மாவட்ட கலெக்டர் இவைகளை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு விவசாய சங்கத்தின் காஞ்சிபுரம் தொகுதி குழு சார்பாக கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

The post காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் 11 ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு: கலெக்டரிடம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு appeared first on Dinakaran.

Tags : Kanchipuram Corporation ,Tamil Nadu Farmers Association ,Kanchipuram ,Tamil Nadu Farmers' Association ,District ,Collector ,Kalachelvi Mohan ,Kanchipuram District ,Block ,President ,E.Lawrence ,
× RELATED திருத்துறைப் பூண்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டம்