காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் எருமையூர் கிராம பகுதிகளில் 52க்கும் மேற்பட்ட கல் உடைக்கும் ஆலைகள் செயல்படுகின்றன. இதனால், அப்பகுதி முழுவதும் மிகுந்த ஒலி மாசு, காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக இ.வி.சம்பத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மனுவில், எருமையூர் பகுதியில் மட்டும் சுமார் 3.5 கிமீ தொலைவிற்குள்ளாகவே 52 கல் உடைக்கும் ஆலைகள் செயல்படுகின்றன. இதனால் அப்பகுதியில் சுவாசிக்க முடியாத அளவிற்கு காற்று மாசடைந்துள்ளது.
52 கல் உடைக்கும் ஆலைகளில் சில ஆலைகள் அனுமதி பெறாமல் செயல்பட்டு வருகின்றன. அந்த ஆலைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரரின் புகார் தொடர்பாக விசாரணை நடத்த இரு வழக்கறிஞர் ஆணையர்களை நியமித்து உத்தரவிட்டனர்.
அந்த வழக்கறிஞர் ஆணையர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் எருமையூர் பகுதியில் செயல்பட்டு வரும் கல் உடைக்கும் ஆலைகள் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கறிஞர் ஆணையர்கள் ஆய்வு செல்லும் போது, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி, வருவாய் அதிகாரி ஆகியோர் உடன் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை 2 வாரத்திற்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
The post எருமையூர் பகுதியில் 52 கல் உடைக்கும் ஆலைகள் அனுமதியின்றி செயல்படுகிறதா? ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.