×

ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு அரசு எதுவும் செய்யவில்லை என எடப்பாடி பழனிசாமி நீலிக்கண்ணீர் வடிக்கிறார்: திமுக கண்டனம்

சென்னை: ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு அரசு எதுவும் செய்யவில்லை என எடப்பாடி பழனிசாமி நீலிக்கண்ணீர் வடிப்பதாக திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; 2019ம் ஆண்டு ஜனவரி திங்கள் 25ம் நாள் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வாங்கும் ஊதியத்தைச் சொல்லி ஆசிரியர்களுக்கு இவ்வளவு சம்பளமா எனக் கூறி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களைக் கேவலப் படுத்தினார். அவருடைய ஆட்சியில் போராடிய அரசு ஊழியர், ஆசிரியர்களைப் பார்த்து, “அதிக சம்பளம் வாங்கும் நீங்கள் போராடலாமா? என்று கேட்டு, ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் கொச்சைப்படுத்தினார் எடப்பாடி பழனிச்சாமி.

ஆனால், இன்றைக்கு அவர் எதிர்க் கட்சித் தலைவர் பதவியில் இருக்கிறார். இப்போது, ஆசிரியர், அரசு ஊழியர்களுக்காக இந்த அரசு எதுவும் செய்யவில்லை எனக் கூறி நீலிக் கண்ணீர் வடிக்கிறார்.
ஆனால், திராவிட முன்னேற்றக் கழக அரசு எல்லாக் காலத்திலும் ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் போற்றிப் பாதுகாத்து வருகிறது. அரவணைத்து வருகிறது. கலைஞர் 19 ஆண்டுகால முதலமைச்சர் பொறுப்பில் 4 முறை ஊதியக் குழுக்களை அமைத்து ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியங்களை வழங்கி அரசு ஊழியர் ஆசிரியர்களின் பொருளாதாரத்தை உயர்த்தியுள்ளார். இதனை அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் நன்றாக அறிவார்கள்.

அதனால், அவர்கள் இந்த அரசுக்கு எப்போதும் ஆதரவாக இருக்கிறார்கள். ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு உதவ வேண்டும் என்பது பழனிசாமியின் நோக்கம் அல்ல. திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அவர்கள் அளித்தும் வரும் ஆதரவைக் கண்டு பொறுக்கமுடியாமல் அதைக் கெடுக்க வேண்டும் என்று குள்ளநரித் தனமாக, நீலிக் கண்ணீர் வடிக்கிறார் என்பது ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு நன்றாகத் தெரியும். உலகில் எங்காவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா? ஒரே ஒரு கையெழுத்தில் ஒரு லட்சத்து 73 ஆயிரம் ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் டிஸ்மிஸ் செய்தார்களே: வீடுகளில் இருந்த பெண்களைக்கூட பெண் பணியாளர்கள், பெண் ஆசிரியர்களைக்கூட வீடுபுகுந்து வந்து கைது செய்து சிறையில் அடைத்த கொடுமைகளை எல்லாம் எல்லோரும் அறிவார்கள்.

இதைச் செய்ததெல்லாம் அ.தி.மு.க ஆட்சிதானே அவர்கள் ஆட்சியில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட 1 லட்சத்து 73 ஆயிரம் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்காக சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் படிகள் ஏறி வழக்கு தொடுத்து அவர்கள் போட்ட டிஸ்மிஸ் உத்தரவை இரத்து செய்ய வைத்து அத்தனைபேரையும் மீண்டும் பணியில் சேரவைத்த பெருமை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு. எப்போது போராட்டம் நடத்தினாலும், அவர்களைக் கைது செய்து வேலை நீக்கம் செய்வது அவர்களுக்கு வாடிக்கை. ஒவ்வொரு முறையும் தி.மு.க. ஆட்சி அமையும் காலங்களில் பழிவாங்கப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் தண்டனைகளை இரத்து செய்து மீண்டும் அவர்களுக்கு வாழ்வளித்து வந்துள்ளதும் திராவிட முன்னேற்றக் கழக அரசுதான் என்பதனை யாருக்கும் சொல்லித் தெரியவேண்டிய அவசியம் இல்லை.

1988 வரை குறைவான சம்பளம் பெற்று வந்த ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக 1989இல் ஊதியங்களை உயர்த்தித் தந்தது திராவிட முன்னேற்றக் கழக அரசு தான். இதைப்போல அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்த காலங்களில் வழங்கிய சலுகைகள் குறித்து ஆண்டுவாரியாகக் காண்போம். ஆசிரியர்- அரசு ஊழியர்களுக்குக் கழக அரசு வழங்கிய சலுகைகள் 1968- உயர்கல்விக்கு ஊக்க ஊதிய உயர்வுகள்; 1969- ஈட்டிய விடுப்பை ஆண்டுக்கு 15 நாள் – ஒப்படை செய்து பணம் பெறும் திட்டம்; திருமணக் கடன், வாகனக் கடன், வீடு கட்ட கடன் வழங்கும் திட்டங்கள்; 1970- தனியார் பள்ளிகள், உள்ளாட்சி நிறுவனப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கும் திட்டம்; 1972- அரசு ஊழியர் இறந்தால் கருணை அடிப்படை நியமன முறை அறிமுகம்;

1973- 10 ஆண்டு பணி முடித்தால் தேர்வு நிலை (Selection Grade); 20 ஆண்டு பணி முடித்தால் சிறப்பு நிலை (Special Grade) பதவி உயர்வுகள் வழங்கும் திட்டம்; 1974- தமிழாசிரியர்களிடையில் முதல்நிலை, இரண்டாம் நிலை என்ற பாகுபாடுகள் நீக்கம்; பணியில் இருக்கும் ஆசிரியர் இறக்க நேர்ந்தால் நிதியுதவி வழங்கும் குடும்பப் பாதுகாப்புத் திட்டம்; தனியார் பள்ளி ஆசிரியர்களுக்குப் பணிப் பாதுகாப்பு அளிக்க வகைசெய்திடும் ‘தமிழ்நாடு ஏற்பளிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் (ஒழுங்குபடுத்தும்) சட்டம்’ 1.12.1974 முதல் நடைமுறை; 1976- தமிழாசிரியர்கள் பெற்ற புலவர் பட்டயம் பி.லிட். பட்டமாக உயர்த்தப்பட்டது; 1989- ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் ஒன்றிய அரசுக்கு இணையான ஊதிய விகிதம்;

1990- பொங்கல் போனஸ் / கருணைத் தொகை; 1997 – முழு ஓய்வூதியம் பெற 33 ஆண்டுகளுக்குப் பதில் 30 ஆண்டு பணிக் காலமே போதும் எனும் திட்டம் நடைமுறை; ஓய்வு பெறும் நாளன்று பெறும் அடிப்படை ஊதியத்தில் 50 விழுக்காடு, அல்லது கடைசி 10 மாதகால சராசரி ஊதியத்தில் 50 விழுக்காடு இதில் எது அதிகமோ அந்தத் தொகையை 1.7.1996 முதல் ஓய்வூதியமாகக் கணக்கிடும் திட்டம் நடைமுறை; -என ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் பல சலுகைகளை வழங்கியது கழக அரசு. அவற்றில் பல சலுகைகளை 2001-இல் அமைந்த அ.தி.மு.க. அரசு ரத்து செய்தது. அதிமுக அரசு ரத்து செய்த சலுகைகள் அனைத்தையும் 2006 கலைஞர் முதலமைச்சராக பொறுப்பேற்று மீண்டும் அவற்றை நடைமுறைப்படுத்தினார்.

2006- அதிமுக அரசு 2003 ஆம் ஆண்டில் கொண்டு வந்து நடைமுறைப்படுத்திய அரசு ஊழியர் நியமனத் தடைச் சட்டம் “டெஸ்மா” 7.6.2006 அன்று ரத்து செய்யப்பட்டது. 2006- வேலை நியமனத் தடைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு அரசுப் பணியில் சேருவதற்குரிய உச்ச வயது வரம்பினை 17.7.2006 அன்று ஐந்து ஆண்டுகள் உயர்த்தப்பட்டது. 2006- அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 10.4.2003 மற்றும் 1.7.2003 முதல் 4.7.2003 வரையிலான நாட்களை, ஊதியமில்லா விடுப்பாக முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. அந்த நாள்களை ஊதியத்துடன் கூடிய பணிக் காலமாக ஏற்று 23.6.2006 அன்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. 2006- தலைமைச் செயலகப் பணியாளர்கள் மாலை நேரத்தில் வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இடவேண்டுமென அ.தி.மு.க அரசு பிறப்பித்த ஆணையை கலைஞர் அரசு 23.6.2006 அன்று ரத்து செய்தது.

2006- அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொதுக் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட காலமான 23.10.2002 முதல் 1.11.2002 வரையிலான 10 நாள்கள் முந்தைய அரசினால் ஊதியமில்லாத காலமாக அறிவிக்கப்பட்டது. அந்த 10 நாள்களையும் ஊதியத்தோடு கூடிய பணிக்காலமாக 31.7.2006 அன்று உத்தரவிட்டது கலைஞர் அரசு. 1996- அரசு ஊழியர்கள் முழு ஓய்வூதியம் பெற தகுதியுள்ள பணிக்காலம் 33 ஆண்டுகள் என்பதை 30 ஆண்டுகளாகக் குறைத்து 1996இல் கழக அரசு நடைமுறைப்படுத்தியது. 2006 – கடைசியாகப் பெற்ற ஊதியத்தில் 50 விழுக்காடு அல்லது கடைசி 10 மாதங்களில் சராசரி ஊதியத்தில் 50 விழுக்காடு இதில் எது அதிகமோ அதனை ஓய்வூதியமாக கணக்கிடும்
முறையை இந்த அரசு 31.7.2006 அன்று ஆணையிட்டு, மீண்டும் நடைமுறைப் படுத்தியது.

2007-இந்தச் சலுகையை 1.4.2003 முதல் 30.7.2006 வரை ஓய்வு பெற்றவர்களுக்கும், இறந்தவர் களுக்கும் வழங்கி 3.4.2007 அன்று ஆணையிடப்பட்டது. 2006- அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆண்டு ஒன்றுக்கு 15 நாட்கள் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 30 நாட்கள் என ஈட்டிய விடுப்பினைச் சரண் செய்து, பணமாக்கிக் கொள்ளும் திட்டம் 2006இல் மீண்டும் நடைமுறை 2006-அ.தி.மு.க. 30 ஈட்டிய விடுப்பு நாட்களைச் சரண்செய்து பணமாக்கிக் கொள்ளும் சலுகை கழக அரசினால் 14.8.2006 அன்று மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டது. 1990- ஆண்டில் அன்றைய கழக அரசு, ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் பொங்கல் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது;

2006- தலைமைச் செயலகப் பணியாளர்களை மாநிலம் எங்கும் மாறுதலில் அனுப்ப வகை செய்து
அ.தி.மு.க அரசு பிறப்பித்த ஆணை 18.12.2006 அன்று திமுக அரசால் ரத்து செய்யப் பட்டது.
19 ஆண்டுகளில் 4 ஊதியக் குழுக்கள் மூலம் அரசு ஊழியர், ஆசிரியர்கள் பொருளாதாரத்தை உயர்த்திய கலைஞர். 2.10.1970 முதல் மாநில அரசின் இரண்டாம் ஊதியக் குழு ஆண்டுக்கு 47 கோடி ரூபாய்
செலவு. 1.6.1988 முதல் 5 ஆம் ஊதியக்குழு ஆண்டுக்கு ரூபாய் 443 கோடி செலவு; 1.1.1996 முதல் ஆறாம் ஊதியக்குழு ஆண்டுக்கு ரூபாய் 1448 கோடி செலவு; 1.1.2006 முதல் ஏழாம் ஊதியக்குழு ஆண்டுக்கு 5 ஆயிரத்து 155 கோடியே 79 லட்சம் ரூபாய்ச் செலவில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்த 4 ஊதியக் குழுக்கள் மூலம் அரசு ஊழியர், ஆசிரியர்களின் பொருளாதாரத்தை உயர்த்தியது முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசுதானே. அதே வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021ல் முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல் அரசு ஊழியர் ஆசிரியர்களின் நலன்களைப் பரிவோடு கவனித்து சலுகைகள் வழங்கி வருகிறார்கள். முதலமைச்சர் அவர்களால் மகளிர்க்கு மகப்பேறு விடுப்புக் காலம் 9 மாதம் என்பதை 12 மாதங்களாக உயர்த்தியுள்ளார்கள். அரசு பணிகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பதை 40 விழுக்காடாக உயர்த்தியுள்ளார்கள். பழனிசாமி அரசு ஏற்படுத்திவிட்டுபோன கடன்களால் ஏற்பட்ட கடுமையான நிதிநெருக்கடிகளுக்கு இடையிலும் எல்லோருக்கும் எல்லாவற்றையும் தடையின்றி நிறைவேற்றிவரும் முதலமைச்சர் ஒன்றிய அரசு உயர்த்திவரும் அகவிலைப்படிகளை அவ்வப்போது தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அளித்து வருகிறார்கள்.

என்பதுடன் அடுத்தடுத்து அவர்களுடைய கோரிக்கைகளும் அவர்கள் அனைவரும் மகிழும் வகையில் நிறைவேற்றப்படும். பழைய அரசு அலுவலர் குடியிருப்புகள் படிப்படியாக புதிதாகக் கட்டப்படும். அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் வீடுகட்டும் முன்பணம் 40 லட்சம் ரூபாயிலிருந்து 50 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர் இறக்க நேரிட்டால், குடும்ப உறுப்பினர்களுக்கு ‘தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்களின் குடும்பப் பாதுகாப்பு நிதித் திட்டத்தில்’ நிதியுதவியாக 50,000 ரூபாய் வழங்கப்படுகிறது.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 6.11.2024 அன்று கோயம்புத்தூரிலும், 10.11.2024 அன்று விருதுநகர் மாவட்டத்திலும் சிறப்பான முறையில் பணியாற்றிய அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை நேரில் அழைத்து பாராட்டிச் சிறப்பித்தார்.

ஊரக வளர்ச்சித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, நெடுஞ்சாலைத்துறை, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், வருவாய்த்துறை, கல்வித்துறை போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர் சங்க நிர்வாகிகள் முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். சமக்ர சிக்சா அபியான் திட்டத்திற்கு உரிய நிதியை ஒன்றிய அரசு வழங்காத நிலையிலும், 32,500 ஆசிரியர் மற்றும் பணியாளர்களுக்கு செப்டம்பர், அக்டோபர் மாதங்களுக்குரிய ஊதியங்களை உரிய நாளில் வழங்கி பாதுகாத்துள்ளது முதலமைச்சர் அவர்களின் திராவிட மாடல் அரசு. எனவே, பழனிச்சாமி அவர்களின் நீலிக் கண்ணீர் நாடகம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களிடம் கடும் எதிர்பையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

The post ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு அரசு எதுவும் செய்யவில்லை என எடப்பாடி பழனிசாமி நீலிக்கண்ணீர் வடிக்கிறார்: திமுக கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Edappadi Palanisami ,Dimuka ,Chennai ,Edapadi Palanisami ,Chief Minister ,
× RELATED அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல்...