×
Saravana Stores

மாஜி டிஜிபி சுனில் குமார் நியமனத்தை எதிர்த்த வழக்கை உடனடியாக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு: எல்லாவற்றுக்கும் அரசியல் சாயம்பூச வேண்டாம் என நீதிபதி கண்டிப்பு

சென்னை: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமார் நியமிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கை உடனடியாக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.  தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமாரை நியமித்து தமிழக அரசு அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், சுனில்குமாரின் நியமனத்தை ரத்து செய்யக் கோரி அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் மற்றும் சுனில்குமார் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்திருந்தது. வழக்கு இன்று பட்டியலிடப்படாத நிலையில் மனுதாரர் தரப்பில் நீதிபதி வி.பவானி சுப்பராயன் முன்பு முறையிடப்பட்டது.

அப்போது, பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு விட்டதா? என்பது குறித்து கேட்டு தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்ட நீதிபதி வழக்கை பட்டியிலடுவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என கூறினார். மனுதாரர் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதி, நியமிக்கப்பட்ட நபர் தகுதி இல்லாத நபராக இருந்தால் மட்டுமே தலையிட முடியும். இல்லையென்றால் அரசின் கொள்கை முடிவில் எவ்வாறு தலையிட முடியும். இந்த வழக்கை உடனடியாக விசாரிக்கவில்லை என்றால் வானம் இடிந்து விழுந்துவிடாது. அனைத்திற்கும் அரசியல் சாயம் பூச வேண்டாம் என்று குறிப்பிட்டார்.

The post மாஜி டிஜிபி சுனில் குமார் நியமனத்தை எதிர்த்த வழக்கை உடனடியாக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு: எல்லாவற்றுக்கும் அரசியல் சாயம்பூச வேண்டாம் என நீதிபதி கண்டிப்பு appeared first on Dinakaran.

Tags : ICOURT ,MAJI DGP ,SUNIL KUMAR ,Chennai ,Chennai High Court ,TGB ,Tamil Nadu Uniform Personnel Selection Board ,Majhi ,TGP ,
× RELATED மருத்துவமனைகள் தொடர்பான விளம்பரங்களை...