பொள்ளாச்சி : பொள்ளாச்சி பகுதியிலிருந்து ஒரு மாதத்திற்கு பிறகு வெளியிடங்களுக்கு அனுப்பப்படும் இளநீர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள தென்னைகளில் உற்பத்தியாகும் பச்சை நிற இளநீர் மற்றும் செவ்விளநீர் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலங்களில் சென்னை, மதுரை, திண்டுக்கல், கடலூர், தூத்துக்குடி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்டங்களுக்கும், ஆந்திரா மற்றும் கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
இதில், இந்த ஆண்டு ஜனவரி முதல் கடந்த நவம்பர் மாதம் துவக்கம் வரையிலும், பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியிலிருந்து லாரி மற்றும் டெம்போக்கள் மூலம் வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் இளநீர் குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த மாதம் சென்னை, கடலூர், தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழையின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால், பொள்ளாச்சியிலிருந்து சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு மட்டுமின்றி, ஆந்திரா மாநிலத்திற்கும் இளநீர் அனுப்பும் பணி தடைப்பட்டது. மேலும், இளநீர் உற்பத்தி அதிகரிப்பு காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் இளநீரின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், டெல்லி, ஹைதரபாத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களுக்கு கனரக வாகனங்களில் அனுப்புவது அதிகமாக இருந்தது.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக மழை குறைவால், இளநீரின் அறுவடை மேலும் அதிகமானது. மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் அதிகளவு இளநீர் அனுப்பப்படுகிறது. தற்போது மீண்டும் இளநீருக்கு கிராக்கி ஏற்பட்டிருந்தாலும், அதன் உற்பத்தி மேலும் அதிகரிப்பால், விலை சரிந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டம் மட்டுமின்றி, வட மாநிலங்களுக்கும் இளநீர் அனுப்புவது, வழக்கத்தை விட அதிகமாகியுள்ளது. வெளியூர்களுக்கு இளநீர் ஏற்றுமதி அதிகமானாலும், உற்பத்தி அதிகளவு இருப்பதால், அதனை தேக்கி வைப்பதை தவிர்க்க குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு வியாபாரிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
பல்வேறு மாவட்டம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் நேரடியாக வந்து, குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்து வாங்கி செல்கின்றனர். கடந்த வாரத்தில் இளநீர் உற்பத்தி அதிகரிப்பால், அதன் விலை சரிந்து, கடந்த வாரம் மொத்த விலைக்கு ரூ.35க்கு விற்பனையான இளநீர் நேற்று ரூ.32க்கு விலை போனது என விவசாயிகள் தெரிவித்தனர்.
The post ஒரு மாதத்திற்கு பிறகு பொள்ளாச்சியில் இருந்து வெளியூருக்கு அனுப்பும் இளநீர் எண்ணிக்கை அதிகரிப்பு appeared first on Dinakaran.