×
Saravana Stores

பித்ரு கடன் நிறைவேற்ற குவியும் மக்கள் ஒகேனக்கல்லில் டன் கணக்கில் தேங்கும் பழைய துணிகள்

*அலங்கோலமாக காட்சியளிக்கும் காவிரி கரை

தர்மபுரி : ஒகேனக்கல்லில் பித்ரு கடன் செலுத்தி விட்டு, காவிரி ஆற்றில் பழைய துணிகளை அப்படியே விட்டுச் செல்லும் மக்களால் சுகாதார சீர்கேடு அபாயம் அதிகரித்துள்ளது.
தென்னிந்தியாவில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒகேனக்கல் பிரதான இடத்தை பிடித்துள்ளது. காவிரியின் நுழைவிடமான ஒகேனக்கல் புனித தலமாகவும் கருதப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும், தமிழகத்தின் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் தினசரி வருகின்றனர்.

கோடை காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை பலமடங்கு அதிகரித்து காணப்படும். சுற்றுலா வருவோர் மெயினருவி, மணல்மேடு, கூட்டாறு, சினி பால்ஸ், முதலைப்பண்ணை, தொங்கும் பாலம் மற்றும் ஆலம்பாடி பரிசல்துறை ஆகிய இடங்களை சுற்றிப்பார்த்துச் செல்கின்றனர். குறிப்பாக மெயினருவி மற்றும் சினி பால்ஸ் ஆகியவற்றில் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் குளிப்பது வழக்கம்.

பரிசல் மூலம் சுற்றுலா பயணிகளை, அருவிகளுக்கு மிக அருகாமையில் அழைத்துச் செல்வார்கள். எண்ணெய் குளியல் இங்கு பிரபலம். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. ஒகேனக்கல் சுற்றுலா தலத்தை சுமார் ரூ.18 கோடியில் மேம்படுத்தும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. விரைவில் திறப்பு விழா காண உள்ளது. இந்நிலையில், ஒகேனக்கல் காவிரி கரையில் நீத்தார் இறுதிச்சடங்கு செய்வது, முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கமாக உள்ளது.

இறந்தவர்களுக்கு காரியம் செய்வதற்காக, தனி வாகனங்கள் மூலம் தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். யாகம் வளர்த்து வழிபடும் மக்கள், அதில் வைத்த எள் சாதத்தை எடுத்துச் சென்று, காவிரியில் கரைத்து பித்ரு கடன் தீர்க்கின்றனர். அப்போது, தாங்கள் உடுத்திய ஆடைகளை, அப்படியே ஆற்றில் களைந்து விட்டு, கரைக்கு திரும்பி புத்தாடை உடுத்திக் கொள்கின்றனர். தொடர்ந்து பூஜை பொருட்களையும் அப்படியே ஆற்றில் கொட்டுகின்றனர். இதனால், காவிரி மாசடைகிறது.

அங்கு வாழும் மீன் உள்ளிட்ட உயிரினங்களுக்கு ஆபத்தாக முடிகிறது. எனவே, ஆற்றில் விடும் துணிகளையும், பூஜை பொருட்களையும் சேகரிக்க தனியாக ஊழியர்கள் நியமிக்க வேண்டும், உரிய கட்டுப்பாடுகளை அறிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

ஒகேனக்கல் காவிரி ஆற்றில், கடந்த 3 மாதத்திற்கு முன்பு நீர்வரத்து விநாடிக்கு 2 லட்சம் கனஅடி வரை அதிகரித்தது. தண்ணீர் பெருக்கெடுத்து வந்த நிலையில், நீத்தார் இறுதிச்சடங்கு செய்தவர்களால் விட்டுச் செல்லப்பட்ட பழைய துணிகள் அடித்து வரப்பட்டு, பல்வேறு இடங்களில் டன் கணக்கில் தேங்கின. தண்ணீர் வடியத்தொடங்கியதும், ஆற்றுப்படுகையில் உள்ள மரம், செடி கொடிகளில் தோரணங்கள் போல பழைய துணிகள் தொங்கிக் கொண்டிருந்தன.

துண்டுகள், டிராயர்கள் மட்டுமின்றி பழைய சேலைகள், வேஷ்டிகள் மற்றும் சட்டைகள், பனியன்கள் கந்தலான நிலையில் கிடந்தது. நாளடைவில் தண்ணீர் குறைந்த நிலையில், வெயிலில் காய்ந்த துணிகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டு, மீண்டும் கரையோரத்தில் குவிந்து கிடப்பதால் காவிரிக்கரை அலங்கோலமாக காணப்படுகிறது.

காவிரி கரையோரம் குவிந்து கிடக்கும் துணிகள் ஆற்றில் அடித்து வரப்பட்டு, நீர்வீழ்ச்சிகளில் குளிக்கும் சுற்றுலா பயணிகளின் தலையின் மீது விழுகிறது. எனவே, இறந்தவர்களுக்கு காரியம், திதி கொடுக்கும் இடங்களான முதலைப்பண்ணை, சின்னாறு கூடும் இடம், ஊட்டமலை போன்ற காவிரி கரையோர இடங்களில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேனர்கள் வைக்க வேண்டும். பூஜை பொருட்களை ஆற்றில் வீசுவதை தடுக்கும் வகையில், கரையோரத்தில் குப்பைத் தொட்டிகள் அமைத்து, அதில் போடுவதற்குண்டான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மேலும், துணிகளையும், பூஜை பொருட்களையும் சேகரிக்க ஊழியர்களை, தனியாக நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தற்போது ஒகேனக்கல்லில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த பணிகள் முடிந்த பின்னர், இறந்தவர்களுக்கு காரியம், திதி கொடுக்கும் இடங்களில் விழிப்புணர்வு போர்டு வைக்கப்படும்,’ என்றனர்.

The post பித்ரு கடன் நிறைவேற்ற குவியும் மக்கள் ஒகேனக்கல்லில் டன் கணக்கில் தேங்கும் பழைய துணிகள் appeared first on Dinakaran.

Tags : Okanagan ,Pitru ,Cauvery ,Dharmapuri ,Cauvery river ,Okenakal ,South India ,Dinakaran ,
× RELATED ஒகேனக்கல்லுக்கு 14,000 கனஅடியாக நீர்வரத்து அதிகரிப்பு