*பிரசவத்துக்காக காத்திருப்பு
நாகர்கோவில் : காதல், பாலியல் துன்புறுத்தல், குழந்தை திருமணம் உள்ளிட்ட காரணங்களால் குமரி மாவட்டத்தில் சிறுமிகள் கர்ப்பம் தரித்தல் அதிகரித்துள்ளது. 7 மாதங்களில் 99 சிறுமிகள் கர்ப்பம் தரித்து தற்போது பிரசவத்துக்காக காத்திருக்கிறார்கள். இந்திய சட்டப்படி பெண்ணின் திருமண வயது 18 ஆகும். ஆணின் திருமண வயது 21 ஆகும். இந்த வயதுக்கு கீழ் திருமணம் நடந்தால் அது குழந்தை திருமணமாக கருதப்படுகிறது. குழந்தை திருமணத்தை தடுக்க ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு 2009 முதல் விதிகளை வகுத்து குழந்தை திருமணங்களை தடுக்க சட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
குழந்தை திருமணத்தை ரத்து செய்யவும் சட்டத்தில் வழிவகைகள் உள்ளன. தமிழ்நாட்டில் தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் தான் அதிக குழந்தை திருமணங்களும், சிறுமிகள் கரு தரித்தலும் அரங்கேறி வந்தன. ஆனால் தற்போது அதிக கல்வி அறிவு பெற்ற மாவட்டமான குமரி மாவட்டத்திலும் சிறுமிகள் கரு தரித்தல் அதிகரித்துள்ளது.
இவ்வாறு கருத்தரித்தவர்களில் பள்ளி மாணவிகள் அதிகம் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 19 வயதுக்குள் தாய்மை அடைவது என்பது சம்பந்தப்பட்ட பெண்ணின் உடல் நலத்துக்கு பேராபத்தாகி விடுகிறது. இந்த இளம் வயது கர்ப்பத்துக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாகுவது மற்றும் எதிர்பாலின ஈர்ப்பால் எல்லை மீறுவது போன்றவை காரணமாக அமைந்திருக்கிறது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து அக்டோபர் வரையிலான 7 மாதங்களில் 99 இளம் வயது கர்ப்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருமே தற்போது அந்தந்த ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மூலம் கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள். அனைத்து வசதிகளும் உள்ள மருத்துவமனைகளுக்கு தான் இவர்கள் பிரசவத்துக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவர்கள் பள்ளி மாணவிகள், பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய சிறுமிகள், கல்லூரி முதலாண்டு மாணவிகள் ஆவர். இந்த புள்ளி விபரம் சுகாதாரத்துறைக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கட்டாய நிலை உருவாகி உள்ளது. இதற்காக மாவட்ட கலெக்டரின் நேரடி மேற்பார்வையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த குழு சார்பில் பள்ளி, கல்லூரிகளில் இளம் வயது திருமணம் மற்றும் இளம் வயது கர்ப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி சமீபத்தில் சுங்கான்கடையில உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. மாவட்ட விரிவாக்க கல்வியாளர் ரமேஷ் வரவேற்றார். மாவட்ட சமூக நல அலுவலர் விஜயமீனா, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஷகிலா பானு உள்ளிட்டோர் இளம் வயது கருதரித்தல் அபாயம், எதிர்பாலின ஈர்ப்புகள் குறித்து விளக்கமாக பேசினர்.
இதில் கல்லூரி தாளாளர் காட்வின் செல்வ ஜஸ்டஸ், கல்லூரி முதல்வர் மகேஸ்வரன், மக்கள் கல்வி தகவல் அலுவலர் அப்துல் காதர், ரோட்டரி நிர்வாகிகள், தன்னார்வ தொண்டு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். கருத்தரங்கு ஏற்பாடுகளை மாவட்ட விரிவாக்க கல்வியாளர் ஜோசப் ஏசுராஜன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். கல்லூரி துணை முதல்வர் கிறிஸ்டல் ஜெயசிங் நன்றி கூறினார்.
7 மாதம் வரை தெரிவதில்லை
இந்த கருத்தரங்கில் பங்கேற்றவர்கள் கூறியதாவது: இளம் வயது கர்ப்பம் சம்பந்தப்பட்ட பெண்ணின் உயிருக்கு ஆபத்தாக அமைகிறது. பெரும்பாலானவர்கள் பள்ளி இறுதியாண்டில் கர்ப்பமாகி உள்ளனர். காதல் என்ற போர்வையில் எதிர்பாலின ஈர்ப்பு அவர்களை கட்டுப்பாட்டை மீற செய்கிறது. பல மாணவிகளுக்கு வயிற்றில் வளரும் கரு குறித்து 6 மாதம், 7 மாதம் வரை வெளியே தெரியாமல் இருக்கிறது.
தாயார் அந்த குழந்தைக்கு மாதந்தோறும் வர வேண்டிய இயற்கை நிகழ்வுகள் வராமல் இருப்பது குறித்து கூட யோசிப்பது இல்லை. அந்தளவுக்கு விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள். சில பெற்றோர், தங்களது குடும்ப வறுமை காரணமாக பள்ளி படிப்பு முடிவதற்கு முன்பே திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். அது போன்ற நிகழ்வும் நடந்துள்ளது. பல மாணவிகள், சமூக வலைதள தாக்கம், செல்போனில் ஆபாச வீடியோக்கள் பார்த்து எதிர்பாலின ஈர்ப்புக்கு உள்ளாகி உள்ளனர். வெளியே தெரியாமல் நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல்களும் இளம் வயது கர்ப்பத்துக்கு காரணமாகி இருக்கிறது.
1098க்கு போன் செய்யலாம்
பள்ளிகள், வீடுகளிலும், உறவினர்கள் மூலமும் தங்களுக்கு ஏதாவது இன்னல்கள் நிகழ்ந்தால், பாதிக்கப்பட்ட அந்த சிறுமியோ அல்லது அக்கம் பக்கத்தில் அதை அறிந்தவர்களோ தைரியமாக 1098க்கு போன் செய்யலாம். தகவல் கூறுபவர்களின் விபரம், பாதிக்கப்பட்ட சிறுமியின் விபரம் எதுவும் வெளி வராது. தவறு யார் செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
21 வயதில் திருமணம் செய்ய வேண்டும்
கருத்தரங்கில் மாவட்ட சமூக நல அலுவலர் விஜயமீனா கூறுகையில், இந்திய சட்டப்படி 18 வயது முடிந்த ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்யலாம். ஆனால் உடல் ரீதியாக, மன ரீதியாக ஒரு பெண் 21 வயதில் தான் திருமணத்துக்கு தயாராகிறார். தாய்மை அடையவும் அது தான் சரியான வயதாகும். இல்லையெனில் சத்து குறைபாடு, எடை குறைந்த குழந்தை பிறத்தல், அதிக உதிர போக்கு போன்றவை நிகழும். சில சமயங்களில் தாய், சேய் மரணங்கள் கூட ஏற்படும் என்றார்.
The post குமரியில் எதிர்பாலின ஈர்ப்பு, பாலியல் துன்புறுத்தலால் 7 மாதங்களில் 99 சிறுமிகள் கர்ப்பம் appeared first on Dinakaran.