சென்னை: வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வரும் 30ம் தேதி 1,476 குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகளை முதல்வர் தொடங்கிவைக்கிறார் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சென்னை, வால்டாக்ஸ் ரோடு, தண்ணீர் தொட்டி தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான பழைய பொது பண்டக சாலையில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சி.எம்.டி.ஏ சார்பில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய புதிய குடியிருப்புகள் கட்டிடம் கட்டுதல் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர் வளர்ச்சி குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வட சென்னை வளர்ச்சி திட்டத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட 228 பணிகள், பல்வேறு துறை சார்ந்த பணிகள் ரூ.5,418 கோடி அளவிற்கு பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 140 பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. மீதமுள்ள பணிகளையும் விரைவாக ஆரம்பிக்க வேண்டுமென்ற அடிப்படையில் தண்ணீர் தொட்டி தெரு, வட சென்னை கூட்டுறவு பண்டக சாலை அமைந்திருந்த இடம் ஆகிய 2 இடங்களில் 1,471 குடியிருப்புகள் கட்டுவதற்குண்டான கட்டுமான பணிகளை வருகின்ற 30ம் தேதி மாலை 4 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்க உள்ளார்.
ஏற்கெனவே 200 மற்றும் 225 சதுர அடி பரப்பளவில் இருந்த குடியிருப்புகளை மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் 400 சதுர அடியில் கட்டி கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதன்படி, குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா, மண்டல குழுத்தலைவர் ஸ்ரீராமுலு, மண்டல அலுவலர் பரிதா பானு, செயற்பொறியாளர் லோகேஸ்வரன், சென்னை குடிநீர் வழங்கல் துறை மேற்பார்வை பொறியாளர் ராதாகிருஷ்ணன், செயற்பொறியாளர் ஆனந்த்குமார், மாமன்ற உறுப்பினர் ராஜேஷ் ஜெயின் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 1,476 புதிய குடியிருப்புகள் கட்டும் பணி வரும் 30ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.