×

சாம்பியன்ஸ் கோப்பை அறிவிப்பு நிகழ்வை ஐசிசி ரத்து செய்ததால் பாக்., அதிர்ச்சி

புதுடெல்லி: பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் கோப்பைக்கான அறிவிப்பை வெளியிடும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியை, சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) ரத்து செய்துள்ளது. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் பாகிஸ்தானில், வரும் 2025ல், பிப். 19 முதல் மார்ச் 19 வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு இந்திய தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சாம்பியன்ஸ் கோப்பைக்காக இந்தியா பங்கேற்கும் போட்டிகள் பாக்.கில் நடந்தால் இந்திய அணி பங்கேற்காது என, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கூறியது.

இதனால் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியலைகள் எழுந்தன. இந்தியாவின் எதிர்ப்பால், இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் இரு நாடுகளுக்கும் பொதுவாக, துபாய் போன்ற இடத்தில் நடக்கலாம் என் யூக தகவல்களும் வெளியாகின.  அப்படி இந்தியா பங்கேற்காமல் போனால், ஐசிசி நிகழ்ச்சிகளை புறக்கணிப்போம் என, பாக்., முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ரஷீத் லத்தீப் கூறியிருந்தார்.

சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளுக்கான அறிவிப்பை வெளியிடும் நிகழ்ச்சியை, பாக்.கின் லாகூரில் இன்று நடத்த ஐசிசி திட்டமிட்டிருந்தது. இதன் மூலம், சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளுக்கென, 100 நாள் கவுன்டவுன் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், லாகூரில் இன்று நடத்தவிருந்த நிகழ்ச்சியை ஐசிசி ரத்து செய்துள்ளது. இதுகுறித்து, ஐசிசி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சாம்பியன்ஸ் கோப்பைக்கான அட்டவணை இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

போட்டியை நடத்தும் பாக். உடனும், பங்கேற்கும் நாடுகளுடனும் இது குறித்த பேச்சுவார்த்தையில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை’ என்றார். லாகூரில் நிகழ்ந்து வரும் பனிப்பொழிவையும், தட்பவெப்ப நிலையையும் லாகூர் நிகழ்ச்சி ரத்துக்கு காரணமாக, ஐசிசி கூறலாம் எனத் தெரிகிறது. ஐசிசியின் இந்த நடவடிக்கை, பாக்., ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

The post சாம்பியன்ஸ் கோப்பை அறிவிப்பு நிகழ்வை ஐசிசி ரத்து செய்ததால் பாக்., அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Pakistan ,ICC ,Champions Trophy ,New Delhi ,International Cricket Council ,Champions Cup ,Dinakaran ,
× RELATED இந்திய போட்டிகள் பாகிஸ்தானில் நடக்காது: ஐசிசி அறிவிப்பு