×
Saravana Stores

கோபி அருகே இலவச பட்டா நிலத்தை ஆக்கிரமித்தவர்களை வெளியேற்ற கோரி கிராம மக்கள் போராட்டம்

*பெண்களை மிரட்டும் கும்பலை கைது செய்ய கோரிக்கை

கோபி : கோபி அருகே இலவச பட்டா நிலத்தை ஆக்கிரமித்தவர்களை அகற்ற கோரியும், பெண்களை மிரட்டும் கும்பலை கைது செய்யக் கோரியும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பெரிய கொடிவேரி பேரூராட்சிக்குட்பட்ட சத்திரம்புதூர், வேட்டுவன்புதூர், புள்ளப்பநாய்க்கனூர், கொடிவேரி மேடு, அம்பேத்கார் நகர், ஒட்டர்பாளையம், மினியப்பன்நகரில் வீடு இல்லாத 650 குடும்பங்களுக்கு, சென்றாயன்பாளையம் கிராமத்தில் மாதேஷ்வரன் கோயில் அருகே கடந்த அதிமுக ஆட்சியில் பட்டா வழங்கப்பட்டது. பட்டா இடத்தை அளவீடு செய்து தருமாறு பயனாளிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லாததால், பட்டா பெற்றவர்களில் 30 குடும்பத்தினர் மட்டும் அப்பகுதியில் குடிசை அமைத்து வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், 5 பேர் கொண்ட கும்பல், டி.என்.பாளையம், குன்றி, கடம்பூர், வாணிப்புத்தூர், அளுக்குளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 250க்கும் மேற்பட்டோரிடம் பட்டா பெற்றுத்தருவதாகக் கூறி ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை வசூலித்ததோடு, அங்கு அவர்கள் குடியிருக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இலவச பட்டா பெற்ற 200க்கும் மேற்பட்டோர், உரிய இடத்தினை அளவீடு செய்து தருமாறு கூறி 2 நாட்களுக்கு முன் கோபி சப் கலெக்டர் சிவானந்தத்திடம் மனு அளித்தனர். இந்நிலையில், வெளியூரை சேர்ந்தவர்களுக்கு பட்டா பெற்றுத் தருவதாக கூறி பணம் வசூலித்து வரும் கும்பல், ஆக்கிரமிப்புகளை அகற்ற கூறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுக்கு மிரட்டல் விடுத்ததுடன், அவர்களை புகைப்படம் எடுத்து ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.இதனால், அதிர்ச்சியடைந்த 200க்கும் மேற்பட்டோர், கொடிவேரி மேடு அருகே வீரசின்னானூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறியல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்படவே, பங்களாபுதூர் இன்ஸ்பெக்டர் தேவராஜ் மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, மிரட்டல் விடுக்கும் கும்பலை கைது செய்ய வேண்டும். பட்டா உள்ளவர்களை தவிர மற்ற ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.விரைவில் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் தொடரும் என மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.

The post கோபி அருகே இலவச பட்டா நிலத்தை ஆக்கிரமித்தவர்களை வெளியேற்ற கோரி கிராம மக்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Gobi ,Erode district ,Dinakaran ,
× RELATED போக்குவரத்து நெரிசலால் திணறல்...