×

நாகப்பட்டினம் நகராட்சி பகுதியில் இரண்டு நாட்களில் குடிநீர் தட்டுபாடு இல்லாமல் வழங்க வேண்டும்: பணிகள் விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு

நாகப்பட்டினம்,நவ.8: நாகப்பட்டினம் நகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை இரண்டு தினங்களுக்குள் நிவர்த்தி செய்ய வேண்டும் என கலெக்டர் ஆகாஷ் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். நாகப்பட்டினம் நகராட்சி உட்பட்ட பகுதிகளில் கலெக்டர் ஆகாஷ் ஆய்வு மேற்கொண்டார். நாகப்பட்டினம் நகராட்சி உட்பட்ட நீலா தெற்கு வீதியில் உள்ள நகராட்சி ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் பழைமை மாறாமல் புதுபிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் நிறைவு பெற்றவுடன் ஓவிய பயிற்சி மையமாக அமைக்கப்படவுள்ளது. இவ்வாறு பழமை மாறாமல் புதுபிக்கும் பணியை கலெக்டர் ஆகாஷ் ஆய்வு செய்தார். பணிகளை தரமாகவும், விரைவாகவும் மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்றார். இதை தொடர்ந்து நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை சாலையில் ரயில்வே பாதையின் மேல் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது.

இதனால் அப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் ஆகியவற்றை மாற்றி அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் ஆகாஷ் ஆய்வு செய்தார். அப்போது குழாய்களை மாற்றி அமைக்கும் போது எதிர்காலத்தில் பிரச்சனைகள் வராமல் தரமான முறையில் மாற்றி அமைக்க வேண்டும் என்றார். இதன்பின்னர் நாகப்பட்டினம் பப்ளிக் ஆபீஸ் ரோடு பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெறுவதை ஆய்வு செய்தார். தொடர்ந்து புதிய நம்பியார் நகர் பகுதியில் செயல்படாமல் இருந்த பாதாள சாக்கடை திட்டத்தை ஆய்வு செய்தார். அப்போது இந்த பகுதியில் மீண்டும் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து மற்றும் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைப்பதையும் உறுதி செய்யவேண்டும் என்றார்.

அதனைதொடர்ந்து, கொள்ளிடம் ஆற்றை நீராதாரமாக கொண்டு அம்மையப்பன், வாண்டையார்இருப்பு, அய்யாநல்லூர், கடம்பங்குடி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கிணறுகளில் இருந்து நீர் எடுக்கப்பட்டு அம்மையப்பன் ஊராட்சியில் அமைந்துள்ள 20 லட்சம் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீரேற்று நிலையத்திலிருந்து நாள் ஒன்றுக்கு 22.50 மில்லியன் லிட்டர் குடிநீர் ராட்சத குழாய் மூலம் திருமருகல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீர் உந்தும் நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது. பின்னர் அங்கிருந்து மீண்டும் நாகப்பட்டினம் நகராட்சியில் உள்ள வெளிப்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்றும் நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது. வெளிப்பாளையம் நீரேற்றம் செய்யப்பட்டு நாகப்பட்டினம் நகராட்சி, வேளாங்கண்ணி பேரூராட்சி மற்றும் நாகப்பட்டினம் ஆகிய ஒன்றிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

வெளிப்பாளையம் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து நகராட்சிக்கு 2339 லிட்டர் நிமிடம் ஒன்றிக்கு 20 குதிரை திறன் கொண்ட இரண்டு மின் மோட்டார்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 2.80 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. தற்போது இந்த இரண்டு மின் மோட்டார்களில் ஒன்று பழுதடைந்துள்ளது. இந்த மோட்டாரை பழுது நீக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த மின் மோட்டார் பழுது நீக்கம் செய்யும் பணியை கலெக்டர் ஆகாஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இப்பணியினை விரைந்து முடித்து இரண்டு தினங்களுக்குள் குடிநீர் தட்டுப்பாடு இன்றி விநியோகம் செய்யவேண்டும் என உத்தரவிட்டார். நாகப்பட்டினம் நகராட்சி ஆணையர் லீனாசைமன், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post நாகப்பட்டினம் நகராட்சி பகுதியில் இரண்டு நாட்களில் குடிநீர் தட்டுபாடு இல்லாமல் வழங்க வேண்டும்: பணிகள் விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Collector ,Aakash ,Akash ,Nagapattinam Municipality ,Neela South Road ,Nagapattinam Municipal Area ,Dinakaran ,
× RELATED டிச.26ம் தேதி முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம்