×

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஆற்காடு, நவ.8: ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலை நடந்தது. ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 2ம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் வள்ளி, தெய்வானை சமேதராக சுவாமி பாலமுருகன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கந்த சஷ்டியின் முக்கிய நிகழ்ச்சியான சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நேற்று மாலை நடந்தது. இதில் முதலில் கஜமுகனையும், தொடர்ந்து அஜமுகி, சிங்க முகாசூரன், பானுகோபன் ஆகியோரை சுவாமி பாலமுருகன் வதம் செய்தார். இறுதியாக சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியை காண வந்திருந்த திரளான பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.இதில் நாடகக் கலைஞர்கள் தத்ரூபமாக நிகழ்ச்சியை நடத்திக் காட்டினர்.

இதற்கான ஏற்பாடுகளை ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், செயல் அலுவலர் சங்கர் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இரவு சண்முகப் பெருமானுக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இன்று மாலை 6 மணிக்கு சுவாமி பாலமுருகனுக்கு திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. அதேபோல் ஆற்காடு தோப்புக்கானா கங்காதர ஈஸ்வரர் கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

The post ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Kanda Sashti Surasamhara Festival ,Ratnagiri Balamurugan Temple ,Arcot ,Surasamharam ,Kanda Shashti festival ,Yagasala ,Puja ,
× RELATED மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்றபோது...