×
Saravana Stores

வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் படித்த 11 பேர் தேர்ச்சி பெற்று அசத்தல்: சிறப்பு திறன் மாணவர்களுக்காக திருப்பூரில் ஆயத்த பயிற்சி மையம்

திருப்பூர், நவ.8: தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக அரசு பள்ளிகளில் சிறப்பு திறன் கொண்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான ஆயத்த பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகிறது. ஊட்டச்சத்து உணவுடன், மாணவர்களின் திறனுக்கு ஏற்றவாறு பிசியோதெரபி பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் அனைவருக்கும் கல்வித்திட்டம் சார்பில் சிறப்பு கவனம் தேவைப்படும் மாற்றுத்திறன் உள்ள குழந்தைகளுக்காக பள்ளி சார்ந்த ஆயத்த பயிற்சி மையம் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தாலுகா வாரியாக ஆயத்த பயிற்சி மையங்கள் இயங்கி வருகின்றனர். இதன்மூலம், தமிழகத்தில் மட்டும் 15,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயன் அடைந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த மையங்களில் ஆட்டிசம், பார்வை குறைபாடு, மனநல குறைபாடு, செவித்திறன் குறைபாடு, பேச்சுத்திறன் குறைபாடு, மன நலன் சார்ந்த குறைபாடு, கை, கால் செயல் இழந்த சிறப்பு குழந்தைகள் சேர்க்கப்படுகின்றனர். 5 வயது முதல் 18 வயது வரை உள்ள ஆண் பெண் குழந்தைகள் இம்மையங்களில் சேர்க்கப்படுகின்றனர். இவர்களுக்கு தனித் திறன் படைத்த சிறப்பாசிரியர்கள் மூலம் சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும், பிசியோதெரபி மருத்துவர்கள் மூலம் குழந்தைகளுக்கு தசைப் பயிற்சி சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்திலும் அரசு பள்ளிகளில் சிறப்பு திறன் உள்ள குழந்தைகளுக்கான ஆயத்த பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரண்மனை புதூர் அரசு பள்ளியில் சிறப்பு திறன் கொண்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான ஆயத்த பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.

இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து 20 மாணவ, மாணவிகள் வருகை தருகின்றனர். இதில், பல்வேறு திறன் குறைபாடுள்ள மாணவர்கள் உள்ளனர். இவர்களுக்கு தனி பயிற்சி அளிக்கக்கூடிய வகையில் சுழற்சி முறையில் 5 ஆசிரியர்கள், உதவியாளர், பிசியோதெரபிஸ்ட் உள்ளிட்டோர் பணியாற்றுகின்றனர். இங்கு வரும் குழந்தைகளின் திறனுக்கு ஏற்றவாறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. மற்ற வகுப்பறைகள் போல் அல்லாது சிறப்பு திறன் உள்ள குழந்தைகளுக்கான வகுப்பறைகள் முழுவதும் பார்வையால் அவர்கள் கற்றுக் கொள்ளும் வகையில் வண்ண வண்ண ஓவியங்கள், காகிதங்களால் பொருட்களின் பெயரை கண்டறியக்கூடிய வகையிலான வரைபடங்கள் உள்ளிட்டவை வகுப்பறை முழுவதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 5 முதல் 18 வயதுடைய மாணவர்கள் இந்த வகுப்பறைகளில் கலந்து கொள்கின்றனர்.

மாணவர்களின் திறனுக்கு ஏற்றவாறான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. பயிற்சிகள் மட்டுமல்லாது தினமும் பிசியோதெரபிஸ்ட் மருத்துவர் மூலமாக தசை பயிற்சி அளிக்கக்கூடிய உபகரணங்களும் பள்ளி வளாகத்திலேயே உள்ளது. இதன்மூலம், கல்வி கற்றல் மட்டுமல்லாது கல்வி கற்றலோடு உடல் நலன் முன்னேற்றம் அடையக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சிறப்பு திறன் குழந்தைகளுக்கான ஆசிரியர் கூறுகையில்,“ஆயத்த பயிற்சி மையம் குறித்த விழிப்புணர்வு பெற்றோர்கள் மத்தியில் குறைவாக உள்ளது. இருப்பினும், கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கூடுதலான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. மாணவர்களின் திறனுக்கு ஏற்றவாறு தனித்தனி பயிற்சிகள் வழங்கப்படுகிறது. கல்வி சார்ந்த பயிற்சிகள் மட்டுமல்லாது உடல் நலன் மேம்பட தேவையான தசை பயிற்சிகளும் பள்ளி வளாகத்திலேயே பயிற்றுவிக்கப்படுகிறது.

தமிழக அரசின் சார்பில் தற்போது காலை சிற்றுண்டி மற்றும் மதியம் ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்படுவது மேலும் அவர்கள் ஆரோக்கியமாக வளர்வதை உறுதி செய்வதோடு சக மாணவர்களோடு நாமும் பயணிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. சிறப்புத்திறன் குழந்தைகளின் பெற்றோர் கூறுகையில்,“வீட்டில் குழந்தைகள் தனியாக இருக்கும்போது அவர்களிடம் உள்ள குறைபாடு மேலோங்கி உணரும் வகையில் உள்ளது. ஆனால், ஆயத்த பயிற்சி மையத்தில் மற்ற குழந்தைகளுடன் ஆர்வத்துடன் கல்வி கற்பது விளையாடுவது உள்ளிட்டவை அவர்களின் குறைபாட்டை மறக்க செய்கிறது. மேலும் கல்வி கற்பிக்காத சமயங்களில் குழந்தைகளுடன் பெற்றோர்களுக்கும் அனுமதி வழங்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. பள்ளியிலேயே பிசியோதெரபி பயிற்சி கொடுப்பதன் மூலம் அவர்களின் உடல் நலன் மேம்பட வாய்ப்பாக அமைகிறது. மேலும் வாரம் ஒரு முறை அரசு மருத்துவர்களின் பரிசோதனையும் பள்ளியிலேயே மேற்கொள்ளப்படுகிறது’’ என்றனர்.

The post வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் படித்த 11 பேர் தேர்ச்சி பெற்று அசத்தல்: சிறப்பு திறன் மாணவர்களுக்காக திருப்பூரில் ஆயத்த பயிற்சி மையம் appeared first on Dinakaran.

Tags : Employment Training Centre ,Asatal: Preparatory Training Centre ,Tiruppur ,Special Skill ,Tamil Nadu ,Tiruppur for Special Skill Students ,
× RELATED திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே டெம்போ வேன் கவிழ்ந்து 2 பேர் பலி!!