×

அரசு ஊழியர்கள் மீது பொய் குற்றச்சாட்டு; நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை: வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் கோரிக்கை

சென்னை: அரசு ஊழியர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் எம்.பி.முருகையன், பொதுச்செயலாளர் சங்கரலிங்கம் ஆகியோர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: திரைப்பட நடிகை கஸ்தூரி தமிழக அரசு துறைகளில் பணிபுரியும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பை சேர்ந்தவர்கள் மிக அதிகமான எண்ணிக்கையில் பணிபுரிந்து வருகிறார்கள்.

இவர்கள் அதிக லஞ்ச லாவண்யம் பெற்று, அளவிற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்துள்ளனர். இவர்களால்தான் அரசு துறைகளில் மிக அதிகமான அளவில் ஊழல்கள் மலிந்துள்ளதாக பொத்தாம் பொதுவாக, தரம்தாழ்ந்த ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுகளை பொதுவெளியில் தெரிவித்துள்ளார். நடிகை கஸ்தூரியின் தரக்குறைவான ஆதாரமற்ற இந்த பேச்சுக்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம். தனிநபரின் இதுபோன்ற தரம்தாழ்ந்த பேச்சு மாநிலம் முழுவதும் பணிபுரிந்து வரும் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூகநீதியை நீண்ட நெடுங்காலமாக கடைபிடிக்கும் தமிழ் மக்கள் இதனை அனுமதிக்க மாட்டார்கள். எனவே, குறிப்பிட்ட பிரிவுகளை சேர்ந்த அரசு ஊழியர்களை பொதுமக்கள் மத்தியில் தவறான பிம்பத்தை ஏற்படுத்திடும் விதமாக பேசிய திரைப்பட நடிகை கஸ்தூரி மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.

The post அரசு ஊழியர்கள் மீது பொய் குற்றச்சாட்டு; நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை: வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kasthuri ,Revenue Officers Association ,Chennai ,Tamil Nadu ,Tamil Nadu Revenue Officers Association ,State ,President ,M.P. Murugayan ,General Secretary ,Shankaralingam ,Revenue Officers' Association ,Dinakaran ,
× RELATED அரசு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம்