×

குழித்துறை தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க கோரி பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் துணி துவைத்து குளித்த இளைஞர்கள்

*வீடியோ வைரல்

மார்த்தாண்டம் : குழித்துறை தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க கோரி சாலை பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் குளித்த இளைஞர்கள் அதனை வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டாவது பெரிய வர்த்தக நகரம் மார்த்தாண்டம் ஆகும். இந்த பகுதி வழியாக கேரளாவுக்கும் போக்குவரத்து நடைபெறுவதால் இங்குள்ள சாலைகளில் தினமும் வாகன போக்குவரத்து பரபரப்பாகவே இருக்கும்.

ஆனால் முறையாக பராமரிப்பு இல்லாதது, கனமழை உள்ளிட்ட காரணங்களால் சாலைகள் அடிக்கடி சேதமடைகின்றன. அபாயகரமான பள்ளங்கள் உருவாவதால் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. அதிலும் மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்குவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் ஒருவித பயத்துடனே செல்கின்றனர்.
அதிலும் குழித்துறை சந்திப்பையொட்டி செல்லும் நாகர்கோவில்- திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை மிகவும் மோசமாக உள்ளது. இதுபோன்ற சாலைகளை சீரமைக்க பலமுறை வலியுறுத்தியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் சில இளைஞர்கள் வித்தியாசமான முறையில் மோசமான சாலையின் நிலையை வீடியோவாக படம்பிடித்து வெளியிட்ட சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.அந்த வீடியோ காட்சியில், 3 இளைஞர்கள் குழித்துறை சந்திப்பு பகுதிக்கு வருகின்றனர். அதில் ஒருவர் வீடியோ எடுக்கையில், மற்ற 2 வாலிபர்களும் சாலையோரம் உள்ள பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் உட்கார்ந்து விடுகின்றனர். ஒரு வாலிபர் சட்டையை கழற்றிவிட்டு தேங்கிய நீரில் சோப்பு போட்டு துணி துவைக்கிறார்.

மற்றொரு வாலிபர் பிளாஸ்டிக் வாளியை எடுத்து தேங்கிய தண்ணீரை பிடித்து குளித்து கும்மாளம் போடுகிறார். இதையடுத்து 3 வாலிபர்களும் மாறி மாறி தேங்கிய நீரில் குளிக்கின்றனர். இந்த வீடியோ காட்சியின் பின்னணியில் குஷி படத்தில் இடம்பெறும் மேகம் கருக்குது… மின்னல் அடிக்குது… என்ற பாடல் ஒலிக்கிறது. மேலும் வாலிபர்கள் வீடியோவில் கூறுகையில், குழித்துறை சந்திப்பில் தேசிய நெடுஞ்சாலையோரம் பள்ளத்தை யாரும் சரி செய்யவில்லை. இதுபோன்று சாலையில் குளம் இருப்பதை பாருங்கள்.. நாம் கொடுத்து வைத்திருக்கிறோம்.. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்க்கவே இந்த வீடியோ போடுகிறோம் என குறிப்பிட்டு பேசினர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

The post குழித்துறை தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க கோரி பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் துணி துவைத்து குளித்த இளைஞர்கள் appeared first on Dinakaran.

Tags : Kulitura National Highway ,Marthandam ,Kulithutura National Highway ,Kanyakumari district ,Kerala ,National Highway ,Dinakaran ,
× RELATED குப்பையை எரித்தபோது கடையில் விழுந்த...