×
Saravana Stores

குமரி மாணவர் ஷாரோன் கொலையில் முக்கிய ஆதாரங்கள் கோர்ட்டில் தாக்கல்: கிரீஷ்மா விஷம் கலந்தது அம்பலம்

திருவனந்தபுரம்: குமரி கல்லூரி மாணவர் ஷாரோனுக்கு அவரது காதலி கிரீஷ்மா கொடுத்தது பாராகுவாட் விஷம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் நெய்யாற்றின்கரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள கல்லூரியில் படித்தவர் பாறசாலையைச் சேர்ந்த ஷாரோன் (23). அவரது காதலி களியக்காவிளை ராமவர்மன்சிரையை சேர்ந்த கிரீஷ்மா. இதற்கிடையே கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து ஷாரோனை கொலை செய்தார் கிரீஷ்மா.

இந்த வழக்கு தொடர்பாக திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை நடத்தினர். தொடர்ந்து கிரீஷ்மா, அவரது தாய், மாமாவை ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு நெய்யாற்றின்கரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஷாரோனுக்கு கிரீஷ்மா கஷாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்தார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இருந்த போதிலும் அது என்ன வகையான பூச்சிக்கொல்லி மருந்து என்பதை போலீசாரால் முதலில் கண்டுபிடிக்க முடியவில்லை. இது தொடர்பாக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர்களுடன் போலீசார் தீவிர ஆலோசனை நடத்தினர். இதில் ஷாரோனுக்கு கஷாயத்தில் கிரீஷ்மா கலந்து கொடுத்த விஷத்தின் பெயர், அதற்கான டிஜிட்டல் ஆவணங்கள் கிடைத்தன.

ஷாரோனுக்கு பாராகுவாட் என்ற விஷத்தை கஷாயத்தில் கலந்து கொடுத்தது தெரியவந்து உள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு கிரீஷ்மா மற்றும் ஷாரோன் ஆகியோரது செல்போன்களை போலீசார் கைப்பற்றினர். அவை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில் கிரீஷ்மா பாரசிட்டமால், பாராகுவாட் விஷம் குறித்து விவரங்களை ஆராய்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அளவுக்கு அதிகமாக பாராசிட்டமால் மாத்திரைகளை சாப்பிட்டால் மரணம் ஏற்படும் என்பதை அவர் தெரிந்து கொண்டார். அதன் பிறகு தான் ஜூஸ் சேலஞ்ச் என்ற பெயரில் ஷாரோனுக்கு அவர் ஜூசில் பாராசிட்டாமல் மாத்திரைகளை கலந்து கொடுத்து உள்ளார். ஆனால் கசப்பாக இருப்பதாக கூறி சம்பவத்தன்று ஷாரோன் அந்த ஜூசை குடிக்கவில்லை.

இதனால் அன்று அவர் உயிர் தப்பினார். இதன் பிறகு தான் பாராகுவாட் விஷத்தைக் குறித்து இன்டர்நெட்டில் தேடிப் பார்த்து உள்ளார். உடலில் இந்த விஷம் 15 மில்லி கலந்தால் மரணம் உறுதி என்றும், அதற்கு மாற்று மருந்து இல்லை என்றும் அவர் தெரிந்து கொண்டுள்ளார். 2022ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி காலை 10.30 மணிக்கு ஷாரோனுக்கு கிரீஷ்மா தனது வீட்டில் வைத்து விஷம் கலந்த கஷாயத்தை குடிக்க கொடுத்துள்ளார். அன்று காலையும் பாராகுவாட் விஷம் குறித்து கிரீஷ்மா இன்டர்நெட்டில் பார்த்துள்ளார்.

இந்த ஆவணங்களை போலீசார் நெய்யாற்றின்கரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து உள்ளனர். மேலும் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர் அருணா இது தொடர்பாக நெய்யாற்றின்கரை நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்து உள்ளார். ஷாரோனுக்கு கிரீஷ்மா கலந்து கொடுத்த விஷம் குறித்த முக்கிய விவரம் கிடைத்துள்ளது இந்த வழக்கில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. வழக்கு விசாரணை இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது.

The post குமரி மாணவர் ஷாரோன் கொலையில் முக்கிய ஆதாரங்கள் கோர்ட்டில் தாக்கல்: கிரீஷ்மா விஷம் கலந்தது அம்பலம் appeared first on Dinakaran.

Tags : Kumari ,Sharon ,Grishma ,Thiruvananthapuram ,Kumari College ,Grieshma ,Neyyartinkarai ,Neyur, Kanyakumari ,Greeshma ,Ambalam ,
× RELATED நாகர்கோவிலில் குமரி மாவட்ட சுற்றுச்சூழல் கருத்தரங்கு