×

காவேரிப்பட்டணத்தில் 14 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் உழவர் சந்தை திறக்கப்படுமா?

*பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கிருஷ்ணகிரி : காவேரிப்பட்டணத்தில் பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட உழவர் சந்தை, 14 ஆண்டுகளாகியும், முறையாக மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனை உடனடியாக திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரில் இரு இடங்கள், தேன்கனிக்கோட்டை என நான்கு இடங்களில் உழவர்சந்தைகள் செயல்பட்டு வருகிறது.

காவேரிப்பட்டணத்தில், கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23ம் தேதி, உழவர் சந்தை திறக்கப்பட்டது. ஆனால், அடுத்த சில மாதங்களில் மூடப்பட்டது. அதன்பின், உழவர் சந்தையை பயன்பாட்டிற்கு திறக்கும்படி, பொதுமக்கள் தரப்பில் பல்வேறு மனுக்கள் அளித்தும் திறக்கவில்லை. இதனிடையே, கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம், அங்கு பார்வையிட்ட கலெக்டர் சரயு, உழவர் சந்தையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுத்தார்.

அதன்படி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் தேதி காவேரிப்பட்டணம் உழவர் சந்தை மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால், ஒரு மாதம் கூட நீடிக்காமல் மீண்டும் உழவர் சந்தை மூடப்பட்டு விட்டது.இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘காவேரிப்பட்டணத்தில், பாலக்கோடு சாலையில் உழவர்சந்தை திறக்கப்பட்டது. ஆனால், சாலையோர காய்கறிகடை வியாபாரிகளுக்கு ஆதரவாக மட்டுமே, அதிகாரிகள் செயல்பட்டு வந்தனர். இடைத்தரகர்களின் ஆதரவோடு, அதே பகுதியில் சாலையோரங்களில் வியாபாரம் செய்யும் நிலை தொடர்கிறது. இதில், ஆளும்கட்சி, எதிர்கட்சி என்ற பாகுபாடில்லாமல் அவர்களுடன் அரசியல்வாதிகள் கைகோர்த்து விடுகின்றனர்.

மேலும், சாலையோர கடைகளால் போக்குவரத்து நெரிசலும், கடை வியாபாரிகள், காய்கறி கழிவுகளை சாலையில் வீசி செல்வதும் வாடிக்கையாகி விட்டது. உழவர்கள் தாங்கள் விளைவித்த பொருட்களை, குறைந்த லாபத்தில் நேரடியாக விற்பனை செய்யும் நோக்கில் கொண்டு வரப்பட்ட உழவர்சந்தையை செயல்பட விடாமல், அரசியல்வாதிகளே இடையூறாக உள்ளனர். இதை தட்டி கேட்டால், இடைத்தரகர்களை வைத்து எங்களை மிரட்டுகின்றனர். நாங்களும் கிடைக்கும் விலைக்கு அவர்களுக்கு கொடுத்து விட்டு செல்கிறோம். கலெக்டரே தலையிட்டு உழவர்சந்தையை திறக்க முயன்றும் நடக்கவில்லை,’ என்றனர்.

வேளாண்துறை வணிகம் மற்றும் விற்பனை பிரிவை சேர்ந்த அலுவலர்கள் கூறுகையில், ‘காவேரிப்பட்டணம் உழவர் சந்தையை செயல்பட வைக்க நாங்கள் முயன்றோம். ஆனால், அங்கு என்ன பிரச்னை என்பதை யாரும் தெளிவாக கூறவில்லை. விவசாயிகளை நாங்களே அழைத்து வந்து, உழவர்சந்தையில் கடைகள் போட வைத்து நடத்தினோம். இருப்பினும் அது தொடரவில்லை. அதனால் உழவர் சந்தையை மீண்டும் திறக்கும் எண்ணத்தை கைவிட்டு விட்டோம். உழவர்சந்தை அமைந்துள்ள இடத்தை, வேறு திட்டப்பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது,’ என்றனர்.

பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு, 14 ஆண்டுகள் ஆகியும் உழவர்சந்தை செயல்படவில்லை. ஆனால் உழவர் சந்தையிலிருந்து, 20அடி தூரத்தில் சாலையோர காய்கறி கடைகள் நடத்தப்படுகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரித்து, உழவர் சந்தை மீண்டும் செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் ஆதங்கத்துடன் கூறினர்.

அதேபோல், உழவர் சந்தையை செயல்படுத்தினால் மட்டுமே பொதுமக்களும் நியாயமான விலைக்கு காய்கறிகளை வாங்க முடியும். இங்கு சாலையோரம் கடை வைத்துள்ளவர்கள் ஒன்று கூடி, விலையை நிர்ணயம் செய்து விற்பனை செய்வதால் ஏழை, எளிய பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர் என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

The post காவேரிப்பட்டணத்தில் 14 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் உழவர் சந்தை திறக்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Kaveripatnam ,Krishnagiri ,Farmers' Market ,
× RELATED கிருஷ்ணகிரி நகரில் புத்தாண்டையொட்டி...