சென்னை: சென்னையின் நுழைவு வாயிலாக பெருங்களத்தூர் பகுதியில் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சவாலாக இருந்து வருகிறது. இதற்கு தீர்வாக கடந்த 2010ம் ஆண்டு மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் 2022ல் தான் மேம்பாலத்தில் ஒரு பகுதி திறக்கப்பட்டது. மேலும் பாலத்திற்கு கீழ் குறுகலான சாலைகளை பெரிதாக்கி தற்போது 4 வழிசாலையாக இருக்கும் பகுதியை 8 வழிசாலையாக மேம்படுத்தவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் கொரோனா பரவல், நிலம் கையகப்படுதவதில் சிக்கல்கள் இருந்ததால் பணிகள் தாமதமானது. தற்போது பிரச்னைகள் தீர்க்கப்பட்டு சாலை விரிவாக்க பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் பணிகள் தொடங்கப்படவுள்ளதாகவும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னை பெருநகர மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பெருங்களத்தூர் மேம்பாலத்தின் கீழுள்ள 1.5 கிலோமீட்டர் தூரத்தை முழுமையாக 8 வழிச் சாலையாக மாற்றுகின்றனர்.
தற்போது 4 வழிச் சாலைகள் மட்டும் உள்ளதாலும், பணிகள் முழுமை பெறாததாலும் மழைநீர் தேங்குதல், வாகன நெருக்கடி உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. பெருங்களத்தூர் மேம்பாலத்தை பொறுத்தவரை நான்காவது வழித்தடமான தாம்பரம் கிழக்கு பைபாஸ் சாலை உடன் இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வருகிறது. நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால் பல ஆண்டுகளாக திட்டம் இழுபறியில் இருந்தது.
கடந்த ஜூலை மாதம் அனைத்து பிரச்னைகளும் தீர்ந்து கடந்த வாரம் டெண்டர் கோரப்பட்டுள்ளது. மேலும் கிழக்கு தாம்பரத்தில் காந்தி சாலையை ஒட்டி புதிய சர்வீஸ் சாலை அமைக்கப்படவுள்ளது. இந்த பணிகளுக்காக ரூ.12.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு, சாலையை பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post 1.5 கி.மீ. தூர சாலை விரிவாக்கம் பெருங்களத்தூரில் 8 வழி சாலை பணிகள் மீண்டும் தொடக்கம்: நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.