×

அதிமுகவின் ஊழலை மட்டும் ஏன் விமர்சிக்கவில்லை: நடிகர் விஜய் மீது சீமான் கடும் தாக்கு

சென்னை: அதிமுகவின் ஊழலை மட்டும் விமர்சிக்காதது ஏன் என்று கேட்டு நடிகர் விஜய்யை சீமான் கடுமையாக தாக்கி பேசியுள்ளார். விக்கிரவாண்டியில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழக மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டுக்கு முன்னதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘‘தம்பி விஜய் தனக்கு எதிராகவே அரசியல் செய்தாலும் அவருக்கு எனது வாழ்த்துகள். அவரை வரவேற்பேன்’’ என்று கூறியிருந்தார். விஜய் மாநாட்டில், சீமான் குறித்து பேசும்போது கத்திப் பேசுவது, கூச்சல் போடுவது எனக்கு சுத்தமா பிடிக்காது. அதுதான் புரட்சின்னு சில பேர் நினைக்கிறாங்க என்று விமர்சித்திருந்தார்.

அதனால், மாநாட்டிற்கு பிறகு நடிகர் விஜய்யை சீமான் கடுமையாக எதிர்க்க ஆரம்பித்தார். குறிப்பாக, நடிகர் விஜய்யின் கருத்தியல் ஒரு கூமுட்டை, அவருக்கு அரசியல் தெளிவு இல்லை, என கருத்து தெரிவித்து வந்தார். இந்நிலையில், விடுதலைப்புலிகளின் தமிழீழ அரசியல் பிரிவு பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வனின் 17ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது படத்திற்கு போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

திராவிடம், தமிழ் தேசியமும் ஒன்று இல்லை. ஊழலை பற்றி பேசும் தம்பி விஜய், ஏன் அதிமுகவை விமர்சிக்கவில்லை. அதிமுகவில் ஊழல் இல்லையா என்ன.. ஊழலுக்காக அக் கட்சியின் தலைவியே சிறை சென்றிருக்கிறார். அது உங்களுக்கு தெரியாதா. நான் குட்டிக்கதை சொல்பவன் இல்லை தம்பி. வரலாற்றை கற்பிக்க வந்தவன். நீங்கள் இனிமேல் தான் பெரியார், அம்பேத்கர் எல்லோரையும் படிக்கவேண்டும். நாங்கள் அதை படித்து பிஎச்டி பட்டம் வாங்கி விட்டோம். நீங்கள் இனிமேல்தான் சங்க இலக்கியத்தில் எங்கு இலக்கியம் உள்ளது என்று தேடவேண்டும்.

சங்க இலக்கியத்தில் வருகின்ற பாண்டியர் நெடுஞ்செழிய மன்னனின் பேரனும், பேத்தியும் நாங்கள். எங்களைப் பொறுத்தவரை எதிர்ப்பு புரட்சி முட்டுக்கு முட்டு, வெட்டுக்கு வெட்டு, அன்பு என்றால் அன்பு, வம்பு என்றால் வம்பு. நீங்கள் வெட்ட அருவாளை ஓங்கினால் விழுந்து கும்பிட மாட்டோம், வெட்ட நினைக்கும் போதே வெட்டி விடுவோம். மாநாட்டிற்கு முன்பு வரை வரவேற்றேன். ஆனால் எங்கள் கொள்கைக்கு எதிராக என் பெற்றோர்கள் பேசினாலும் எதிரிகள் தான். குடும்ப உறவை விட கொள்கை உறவே பெரிது.

விஜய் உடன் திருமாவளவன் ஒரே மேடையில் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பதால், அவர்கள் கூட்டணி குறித்து பலர் பேசுகின்றனர். என்னிலும் முதிர்ந்தவர், என்னிலும் அரசியல் அறிவு பெற்றவர் திருமாவளவன், அவரிடம் பாடம் கற்றவர் நாங்கள். எங்கள் வாத்தியார் அவர். எனவே அவர் தவறு செய்ய மாட்டார். கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு கொண்டு வந்தது காங்கிரஸ்.‌‌ சிங்களத்தினரிடம் இருந்து தனிநாடு கேட்டது பிரிவினைவாதமா, இந்தியா மொழி வழி மாநிலமாக பிரிக்கப்பட்டுள்ளதா, இல்லை சாதி, மதம் வாரியாக பிரிக்கப்பட்டுள்ளதா.

கேரளா, கர்நாடகா என அனைத்து மாநிலங்களுக்கும் வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி தமிழகத்திற்கு வாழ்த்து சொல்லாதது ஏன். தேர்தலுக்காக 13 முறை வந்த பிரதமர், ஒரு வாழ்த்து கூட சொல்லவில்லை. தமிழ்நாட்டு மக்களை தேசிய கட்சிகள் புறக்கணிக்கின்றன. கேரள மீனவர்களை தாக்காத இலங்கை, தமிழர்களை மட்டும் தாக்குவது ஏன். விமான படை, கப்பல் படை என படைகளை வைத்துள்ள இந்திய அரசு 70 விமானங்களை வைத்து மெரினாவில் சாகசம் செய்யும் படை, தமிழக மீனவர்களை காப்பாற்றாமல் இருப்பது ஏன். தொடர்ந்து மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தும் இலங்கை அரசு மீது பொருளாதார நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்.

ஆளுநர் தேவை இல்லை என அண்ணா சொன்னார். அதையே தான் நாங்களும் சொல்கிறோம். ஏன் வேண்டாம் என்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு இல்லாத அதிகாரம் நியமிக்கப்பட்ட ஆளுநருக்கு எதற்கு. பார்த்தீர்களா ஆளுநர் ஆர்.என்.ரவி படுத்தும் பாடு‌. கீழ்ப்பாக்கத்தில் இருப்பவரை எல்லாம் இங்கு ஆளுநர் மாளிகையில் உட்கார வைத்திருக்கிறீர்கள்.‌‌ முழுவதும் அர பைத்தியம்.
விஜய்யின் அடிப்படையே தவறாக உள்ளது. விஜய், மீனவர்கள் சாகும் போது ஏன் வரவில்லை. நடிகர் விஜய் கொள்கையை மாற்ற வேண்டும்.

இல்லையென்றால் எழுதிக் கொடுப்பவரை மாற்ற வேண்டும். விஜய்யின் மொழி கொள்கை தப்பாக உள்ளது. வில்லனும், ஹீரோவும் ஒன்றா. கொடிக்கு என்ன விளக்கம் கொடுக்குறீங்க. எதுக்கு மஞ்சள், எதுக்கு சிவப்பு. ரசிகன் வேறு, போராளி வேறு. விஜய்க்கு கூட்டம் கூடும். ஓட்டு வராது. விஜயகாந்திற்கு கூடாத கூட்டமா விஜய்க்கு கூடியது. நடிகை நயன்தாரா கடை திறப்புக்கு 4 லட்சம் பேர் கூடினர். ஆகையால் கூட்டத்தை பற்றி பேச கூடாது. எனக்கு 36 லட்சம் மக்கள் வாக்கு செலுத்தி உள்ளனர். என்னுடைய வாக்கு வங்கியை ஒன்றும் செய்ய முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

* ‘ஒன்னு அந்த பக்கம் நில்லு.. இல்லேனா இந்த பக்கம் நில்லு’
நாம் தமிழர் கட்சி சார்பில், தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டம், பெரம்பூரில் நடைபெற்றது. இதில் சீமான் பேசியதாவது: தமிழ் தேசியமும் திராவிடமும் ஒன்றா, அடிப்படையே தவறு. இது கொள்கை அல்ல, கூமுட்டை. சாலையில் அந்த ஓரத்தில் நில் அல்லது இந்த ஓரத்தில் நில், நடுரோட்டில் நின்றால் லாரியில் அடிபட்டு இறந்து விடுவாய். இது நடுநிலை இல்லை மிகவும் கொடு நிலை. வாட் ப்ரோ… இட்ஸ் வெரி ராங் ப்ரோ… நான் கருவிலேயே என் எதிரி யார் என தீர்மானித்துவிட்டு பிறந்தவன்.

நான் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து சிந்தித்து வந்தவன் இல்லை. கொடும் சிறையில் இருந்து சிந்தித்து வந்தவன். இது சினிமா பஞ்ச் டயலாக் இல்லை தம்பி… இது நெஞ்சு டயலாக். எங்கள் லட்சியத்திற்கு எதிராக பெற்ற தகப்பனே வந்தாலும் எதிரி எதிரி தான். அதில் தம்பியும் கிடையாது, அண்ணனும் கிடையாது. வேலு நாச்சியார் படத்தை வைத்துவிட்டால் போதுமா, வேலு நாச்சியார் யார் என்று சொல்லு தம்பி.

சத்தமாக பேசும் நான் வரவில்லை என்றால் வேலு நாச்சியார், அழகு முத்துக்கோன், அஞ்சலை, சேர, சோழ பாண்டியர் யார் என்று பலருக்கும் தெரியாது. நீங்க வைத்துள்ள கட் அவுட்டுகள் எல்லாம் நான் வரைந்து வைத்த படங்கள். தீரன் சின்னமலையை சங்க இலக்கியத்தில் படிக்கக்கூடாது தம்பி. வரலாற்றில் படிக்க வேண்டும். அவன் மன்னன் இல்லை, விவசாய குடும்பத்தில் பிறந்த எளிய மகன். திப்பு சுல்தானின் படையை விரட்டி அடித்தவன். வரலாற்றைத் தெரிந்து கொள்ளுங்கள் தம்பி என விஜய்யை கடுமையாக தாக்கி பேசினார்.

The post அதிமுகவின் ஊழலை மட்டும் ஏன் விமர்சிக்கவில்லை: நடிகர் விஜய் மீது சீமான் கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Seeman ,Vijay ,Chennai ,Tamil Nadu Vetri Kazhagam conference ,Vikravandi ,Naam Tamilar Party ,
× RELATED மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது...