×

தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை ஊட்டி- கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஊட்டி: தீபாவளி பண்டிகை மற்றும் வார விடுமுறை என நான்கு நாட்கள் விடுமுறை வந்த நிலையில் ஊட்டி, கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் பல மடங்கு குவிந்தனர். தீபாவளி பண்டிகை மற்றும் வார விடுமுறை என 4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக ஊட்டியை சுற்றுலா பயணிகள் முற்றுகையிட்டுள்ளனர். தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மற்றும் படகு இல்லங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. ஊட்டியில் உள்ள லாட்ஜ் மற்றும் காட்டேஜ் அனைத்தும் நிரம்பி வழிகிறது.

இதனால் ஊட்டியில் உள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்த நிலையில், ஊட்டியில் இருந்து மைசூர் செல்லும் சாலையில், குன்னூர்-ஊட்டி சாலையில் லவ்டேல் சந்திப்பு முதல் சேரிங்கிராஸ் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. நகருக்குள் வருவதற்கு சுமார் அரை மணி நேரம் ஆனது. அதேபோல், பூங்கா செல்லும் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து சென்றன. இதனால், பூங்கா செல்லும் சாலை நேற்று ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது.

அனைத்து வாகனங்களும் சேரிங்கிராஸ் சிக்னலில் இருந்து கலெக்டர் அலுவலகம் சென்று அங்கிருந்து பூங்காவிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டது. அதேபோல், தொட்டபெட்டா சாலை மற்றும் படகு இல்லம் செல்லும் சாலைகளிலும் வாகன நெரிசல் காணப்பட்டது.  திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த இரண்டு தினங்களாக சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர். நேற்று கொடைக்கானலுக்கு அதிக அளவிலான சுற்றுலாப்பயணிகளின் வருகை காரணமாக சுற்றுலா இடங்கள் அனைத்தும் திணறின.

அதிக அளவிலான வாகனங்களின் வருகையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சுற்றுலாப்பயணிகள் அவதிக்குள்ளாகினர். தங்கும் விடுதிகள் அனைத்தும் ஹவுஸ்புல் ஆகின. கொடைக்கானலில் நேற்று இதமான சூழல் நிலவியது. அவ்வப்போது மேக கூட்டங்கள் சுற்றுலா இடங்களை தழுவிச் சென்றதை பயணிகள் ரசித்தபடி சென்றனர்.

The post தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை ஊட்டி- கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Kodaikanal ,Diwali ,Diwali festival ,Ooty- Kodaikanal ,
× RELATED களை கட்டிய சுற்றுலா தலங்கள் ஊட்டி,...