×

திருச்சேறை சாரநாதப் பெருமாள்

திருச்சேறை திருக்கோயிலிலுள் நுழையுமுன் ராஜகோபுரத்துக்கு எதிரே மிகப் பெரிய பரப்பில் ஒரு புஷ்கரிணியைக் காணலாம். நீர் வற்றி, ஆனால் நீர்ப்பசை காரணமாக மேல் மணல் பரப்பு மெலிதான பசுமை போர்த்தபடி அமைந்திருப்பது அந்த வறட்சியிலும் இறைவனின் கருணையை உணரவைக்கிறது.

வேதங்களைப் பாதுகாக்கும் பெரும் பணிக்கு இந்தப் பகுதி மணல் உதவ, அதனாலேயே குளமாகி, நீர்த்தேங்கி, கோயில் உபயோகத்துக்கு மட்டுமல்லாமல், அந்த ஊருக்கே ஊருணியாக விளங்கி, சார தீர்த்தம் என்று பெயரும் கொண்டிருக்கிறது. இந்த மணல் எதற்காக, எப்படி உதவியது?

ஒரு பிரளயம் தோன்றி பிரபஞ்சத்தையே மூழ்கடிக்கத் தயாராக இருந்தபோது, மீண்டும் புத்துலகம் படைக்கும் பொறுப்பு பிரம்மனுக்கு வந்து சேர்ந்தது. இதற்கு முன் இதுபோன்ற ஒரு புது சிருஷ்டிக்குத் தனக்குப் பெரிதும் துணை புரிந்த வேதங்களையும், ஆகமங்களையும் பாதுகாக்க வேண்டிய அவசியமும் அவனுக்கு ஏற்பட்டது. உடனே மண்ணால் ஒரு குடம் செய்து அதனுள் அவற்றை இட்டு வைக்க முனைந்தான். பூவுலகில் எந்தப் பகுதியில் மண்ணெடுத்து குடம் செய்தாலும் அந்தக் குடம் உடைந்துதான் போயிற்றே தவிர, முழுமையடையவில்லை. இதனால் கவலையடைந்த அவன் திருமாலை வணங்கி, வழிகாட்டுமாறு கேட்டுக்கொண்டான். அவரும் தான் விரும்பி உறையும் திருச்சேறை தலத்திலிருந்து மண்ணெடுத்து குடம் வடிக்குமாறு அறிவுறுத்தினார். அதன்படியே பிரம்மன் செய்ய, குடம் நலுங்காமல் நிலைத்தது. அந்தப் பானையில் வேதங்களை இட்டு பிரம்மன் காப்பாற்றிப் பராமரித்தான்.

இவ்வாறு தேவர்கள், பூவுலகினர் அனைவரது வாழ்வாதாரம் என்ற சாரம் பொதிந்த வேதங்களையும், ஆகமங்களையும் அந்த மண் குடம் தாங்கிக்கொண்டதால், இந்தத் தலமே சார க்ஷேத்திரம் என்றானது. மண் கொடுத்த திருக்குளம் சார புஷ்கரிணியானது. இப்படி யோசனை சொன்ன பகவான் சாரநாதரானார். அதனாலேயே தாயாரும் சார நாயகியானாள். திருக்குளத்தில் சேறு போன்ற மணல் கிடைத்து அதனால் குடம் செய்யப்பட்டதால், இந்தத் தலம் திருச்சேறை என்றானது என்றும் ஒரு விளக்கம் உண்டு.

ஒரு சமயம் கங்கை, யமுனை, சரஸ்வதி, காவிரி முதலான ஏழு நதிகள் மானுட வடிவங்கொண்டு விந்திய மலையடிவாரத்தில் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அப்போது அந்த வழியாகச் சென்ற விஸ்வாவசு என்ற கந்தர்வன் அவர்களைப் பார்த்து கைகூப்பி வணக்கம் தெரிவித்துவிட்டுச் சென்றான். அதைப் பார்த்த நதிப் பெண்களுக்கு, குறிப்பாக காவிரிக்குப் பெருங்குழப்பம். அவன் யாருக்கு மரியாதை செலுத்திவிட்டுச் செல்கிறான்? ஒட்டுமொத்தமாக அனைவருக்குமான வணக்கம் இது என்றும் எடுத்துக்கொள்ளமுடியவில்லை. கந்தர்வன் வணங்குகிறான் என்றால், அவனுடைய பெருமதிப்புக்கு உரியவராகத்தான் வணங்கப்படும் நபர் இருத்தல் வேண்டும். அந்தத் தகுதி தங்கள் எழுவரில் யாருக்கு இருக்கிறது? அதே கந்தர்வன் திரும்ப அதேவழியாக வந்தபோது மீண்டும் அவ்வாறே வணங்கினான். தன் சந்தேகத்தை காவிரி அவனிடமே நேரடியாகக் கேட்டுவிட்டாள்.

அவனோ, ‘உங்களில் யார் பெருமை மிக்கவரோ அவரையே நான் வணங்கினேன்’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான். அவன் நேரடியாகத் தன்னைக் குறிப்பிட்டுச் சொல்லாததால், காவிரிக்கு தன்னைவிட பெருமை வாய்ந்தவள் அந்தக் குழுவில் இருப்பது புரிந்தது. உடனே வாதிட ஆரம்பித்தாள். காவிரியின் சந்தேகத்தால் எழுந்த பொறாமை மிகுந்த, கோபமான விவாதத்தில் கலந்துகொள்ள விரும்பாத பிற பெண்கள் அதிலிருந்து விலகிக்கொண்டார்கள். ஆனால் கங்கை மட்டும் அந்த மரியாதை தனக்குதான் என்று சொல்லி காவிரியை மேலும் வேதனைக்குள்ளாக்கினாள்.

உடனே காவிரி பிரம்மனை நாடிச் சென்றாள். தீர்ப்பு வழங்குமாறு கேட்டாள். பிரம்மனோ, ‘‘என்னைப் பொறுத்தவரை கங்கைதான் பெருமை மிக்கவள். ஏனென்றால், வாமனனாக வந்து திரிவிக்கிரமனாக பேரவதாரம் எடுத்த திருமாலின் பாதம், ஆகாயத்தை அளக்க நீண்டபோது, அதற்குத் திருமஞ்சனம் செய்துவைத்தவன் நான். அப்போது அவரது பாதத்திலிருந்து வீழ்ந்த நீர்தான் கங்கை. ஆகவே உன்னைவிட அவளே உயர்ந்தவள்,’’ என்று சொல்லிவிட்டார். கூடவே, ‘‘நீ மஹாவிஷ்ணுவை தவமிருந்து சரணடைந்தாயானால், அவர் கங்கையைவிட என்றில்லாவிட்டாலும், கங்கைக்குச் சமமான பெருமையை நீ அடையுமாறு செய்வார்,’’ என்று யோசனையும் தெரிவித்தார்.

தான் கங்கையினும் மேலானவள் என்ற பெருமை கொள்ள விரும்பிய காவிரி, திருச்சேறை திருத்தலத்துக்கு வந்து, சார புஷ்கரிணி கரையில் கடுந்தவம் மேற்கொண்டாள். எப்படிப்பட்ட தவம் அது? கடுமையான கோடை காலத்தில், தன்னைச் சுற்றிலும் நான்கு திக்குகளிலும் நான்கு அக்னி வளர்த்து, மேலே சூரியனையும் ஒரு அக்னியாக பாவித்து அந்த பஞ்ச அக்னிகள் மத்தியிலும், மிகுந்த குளிர் காலத்தில் உறைநிலை காணும் நீரின் மத்தியிலும் இயற்றிய தவம் அது. அவளுக்கு அருள் செய்ய விரும்பிய பரந்தாமன் ஒரு சிறு குழந்தை வடிவாக அவள் முன் தோன்றி தவழ்ந்து வந்தார். மிகுந்த தேஜஸுடன் ஒளிர்ந்த அந்தக் குழந்தையைப் பார்த்ததுமே அது அந்தப் பரம் பொருளே அல்லாது வேறு யாருமல்ல என்று காவிரியால் உணர முடிந்தது.

அந்தக் குழந்தையைக் கையிலெடுக்கவும் தோன்றாமல் அப்படியே இரு கரம் கூப்பி வணங்கி நின்றாள். அதே கணத்தில் எம்பெருமான் தன் சுயரூபம் காட்டினார். இந்த தரிசனம் காவிரிக்குத் தனிச் சிறப்பான தரிசனம் என்றே சொல்லலாம்; ஆமாம், திருமகள், பூதேவி, நீளாதேவி, சாரதேவி, மஹாலக்ஷ்மி என்று ஐந்து தேவியருடன் காவிரிக்குக் காட்சி தந்தார் எம்பெருமான். அவரிடம், தனக்கும் கங்கைக்கு சமமான பெருமையை வழங்க வேண்டும் என்று கோரினாள் காவிரி. பெருமானும் புன்னகைத்தபடி, அவளுடைய கோரிக்கை திரேதாயுகத்தில் நிறைவேறும் என்றும், அப்போது, தான் அவளுடைய அரவணைப்பில் கோயில் கொள்வதாகவும் தெரிவித்தார். அதன்படியே, பின்னாளில் ஸ்ரீரங்கத்தில் காவிரி சூழ, அரங்கனாக அவர் அவதாரம் கொண்டார்.

அவர் இதே கோலத்தில் இத்தலத்தில் காட்சி தர வேண்டும் என்றும், அவரை வந்து தரிசிப்போரின் இன்னல்களைக் களையவேண்டும் என்றும் காவிரி வேண்டிக்கொண்டாள். இவ்வாறு காவிரிக்கு அவர் தரிசனம் நல்கிய திருநாள் தைமாத பூச நட்சத்திர தினமாகும். இந்த தினம், இந்தக் கோயிலைப் பொறுத்தவரை மிகப் புண்ணிய நாளாகக் கருதப்படுகிறது. அதாவது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வியாழன் கிரகமானது, தை மாதத்தில் பூச நட்சத்திர தினத்தில் நுழையும்போது, இந்த சார புஷ்கரிணி, பெரும் புண்ணியம் பெற்றதாகத் திகழ்கிறது. அன்றைய தினம் இந்த திருக்குளத்தில் நீராடுவது மகாமக நீராடலுக்குச் சமமானதாகக் கருதப்படுகிறது! அத்தனை புண்ணியமும் கிட்டும். இந்த புஷ்கரிணிக் கரையில் காவிரித் தாய்க்கு ஒரு சிறு கோயில் உள்ளது. ஒரு குழந்தையைத் தன் கைகளில் அவள் தாங்கியிருப்பது போன்ற விக்ரகம், திருமாலை அவள் ஒரு குழந்தையாகக் கண்ட சம்பவத்தின் சாட்சியாக மிளிர்கிறது. இதே தீர்த்தத்தின் வடமேற்குப் பகுதியில் ஆஞ்சநேயருக்கும் ஒரு கோயில் அமைந்திருக்கிறது. இந்தத் திருக்குளத்தில் நீராட வருபவர்களின் கோரிக்கைகளை இவர் சாரநாதப் பெருமாளுக்கு சமர்ப்பித்து சிபாரிசும் செய்கிறார் என்று சொல்கிறார்கள். அதனால் இவர் சந்நதியில் பக்தர்கள் குழுமுகிறார்கள்.

பரந்து, அகன்று அமைந்திருக்கிறது வெளிப்பிராகார சுற்று. இங்கே இரண்டு மண்டபங்கள் உள்ளன. அந்நாட்களில் பக்தி இசை, நடனநிகழ்ச்சிகள் இந்த மண்டபங்களில் நடைபெற்றிருக்கலாம் என்றுதகவல் தெரிவிக்கிறார்கள். உள் கோபுரத்தினுள் நுழைந்து கருடாழ் வாரை சேவிக்கலாம். இந்த உள் சுற்றில் ஆழ்வார்கள் தனி சந்நதி கொண்டிருக்கிறார்கள். சாரநாயகித் தாயாரும் தனியே கொலுவிருந்து பக்தர்களின் வாழ்க்கை சாரத்தை மேம்படுத்துகிறாள். அடுத்து அன்னதான கூடம் அமைந்திருப்பதும் அன்னையின் பரிவைச் சொல்வது போல இருக்கிறது.

காவிரிக்குக் காட்சியளித்த அதே தோரணையில் பெருமாள் நமக்கும் தம் கருவறையில் தோன்றுகிறார். ஐந்து நாயகியர் புடைசூழ அவரை நின்ற கோலத்தில் காணமுடிகிறது. வேறெந்த திவ்ய தேசத்திலும் காணக்கிடைக்காத அற்புத காட்சி இது. பெருமாள், வைகுண்டத்து பரந்தாமன் போல தனது வலது கரத்தில் ஒரு தாமரை மலரை இரு விரல்களால் பற்றியிருக்கிறார். இந்த பாவத்தை ‘சின் முத்திரை’யாகவும் கண்டு களிக்கிறார்கள் பக்தர்கள். எம்பெருமானுக்கு வடக்குப் பக்கத்தில் காவிரித் தாயையும், தென் பக்கத்தில் மார்க்கண்டேயரையும் காணலாம். இந்த மூலவர் ‘மாமதலைப் பிரான்’ என்றழைக்கப்படுகிறார். ‘வெந்தழல் போல் கூந்தலாளை மண்சேர முலையுண்ட மாமதலாய்’ என்று இந்தப் பெருமாளை மங்களாசாசனம் செய்யும் திருமங்கையாழ்வார் அழகுற விவரிக்கிறார். அதாவது பூதனை என்ற, நங்கைபோல் வந்த அரக்கியின் முலைப்பாலை அருந்தியே அவளை வதம் செய்த மதலைபோல இந்தப் பெருமாளும் சிறு குழந்தையாக அவருக்குக் காட்சியளித்திருக்கிறார்! இதன் பிறகே இந்தப் பெருமாள் மாமதலைப் பிரான் என்றானார். நின்ற கோலத்தில் எழிலுடன் சேவை சாதிக்கும் இந்தப் பெருமானின் திருப்பாதங்களை யாவரும் எளிதாக தரிசனம் காணலாம். இந்தப் பேறும் அபூர்வமாகக் கிடைப்பதே.

பைவிரியும் வரியரவில் படுகடலுள்
துயிலமர்ந்த பண்பா என்றும்
மைவிரியும் மணிவரைபோல் மாயவனே
என்றென்றும் வண்டார் நீலம்
செய்விரியும் தன்சேறை யெம் பெருமான்
திருவடியைச் சிந்தித் தேற்கு என்
ஐயறிவும் கொண்டானுக் காளாணார்க்
காளாமென் அன்புதானே

&என்று அனுபவித்துப் பாடுகிறார் திருமங்கையாழ்வார். ‘பாற்கடலில் ஆதிசேஷன் மீது சயனம் கொண்டிருக்கும் பெருமாள், கருமேக நிறத்தினன், உயர்ந்த மலைபோன்ற கம்பீரம் கொண்டவன். மலர்ந்த நீலநிற மலர்களைச் சுற்றி எந்நேரமும், மெல்லிசையாய் ரீங்காரமிடும் வண்டுகள் சூழ்ந்த குளிர்ச்சி மிகுந்த திருச்சேறையில் எம்பெருமான் எழுந்தருளியிருக்கிறார். இந்தத் தலைவனை யாரெல்லாம் சிந்திக்கிறார்களோ, இவன் திருவடிகளை யாரெல்லாம் சிந்திக்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் நான் அன்பு செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன்,’ என்று நெகிழ்ந்து உருகுகிறார் ஆழ்வார்.

திருச்சேறையை மங்களாசாசனம் செய்த ஒரே ஆழ்வார் திருமங்கைதான். மொத்தம் 13 பாடல்களால் பாமாலையிட்டிருக்கிறார். தேடித் தேடிச் சென்று ஒவ்வொரு திவ்யதேசமாகப் புகுந்து பெருமாளை தரிசனம் செய்து, அந்தப் பெருமாளை தனக்குப் பின் வரும் அனைவரும் உணர்ந்துய்ய இனிய பாடல்களைப் பாடியிருக்கிறார். இப்படி 86 திவ்ய தேசங்களை தரிசித்ததன் பந்தத்தால், பெருமாள் மீது பிரத்யேக பாசம் பூண்டார். அதனால்தான் இந்த மாமதலைப் பிரானை வணங்கும் அடியார்க்கெல்லாம் தான் அடியார் என்று தம் பாசுரங்கள் மூலமாகவே பிரகடனம் செய்துவிட்டார். இதை ஒரு சம்பவம் நயமாக விளக்குகிறது:

பிள்ளை அழகிய மணவாள அரையர் என்பவர் எம்பெருமான் பக்தியில் தோய்ந்த அடியார். வைணவத் திருத்தலங்களைத் தரிசிப்பது அவருக்கு வாழ்நாள் பரியந்தம். அங்கெல்லாம் தனக்கு முந்தைய ஆசார்யார்கள், ஆழ்வார்களின் பாசுரங்களை ஆடிப் பாடி, பெருமாள் சேவை புரிந்து வந்தார். அதுவே தன் வாழ்நாள் கடமை என்ற உணர்வோடு ஒவ்வொரு தலமாகச் சென்று கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அவர் திருச்சேறையை அடுத்த ஊருக்குப் போகவேண்டியிருந்தது. ஆனால் அவரோ திருச்சேறை ஊருக்குள் போகாமல், சுற்றி வயல் வரப்புகள் வழியாக அடுத்த ஊரை நோக்கி நடந்து சென்றார். இதைக் கண்ட இன்னொரு அடியார், ‘‘என்ன சுவாமிகளே, இந்த திருச்சேறை திருத்தலத்துக்கு வந்துவிட்டு, உள்ளே நுழைந்து மாமதலைப் பிரானை தரிசிக்காமல் வேறு வழியில் செல்கிறீர்களே, இது முறையா?’’ என்று கேட்டார்.

பளிச்சென்று நிமிர்ந்த அரையர் கண்களில் நீர் தளும்பி நின்றது. ‘‘நான் மாமதலைப் பிரானை தரிசிக்க மாட்டேன். அப்படி தரிசித்தேனானால், அது என் ஆசார்யன் திருமங்கையாழ்வாரை அவமரியாதை செய்வது போலாகும்,’’ என்றார். இதைக் கேட்ட அடியாருக்குப் பெருந் திகைப்பு. ‘‘என்ன சொல்கிறீர்கள் நீங்கள்?’’ என்று குழப்பத்துடன் கேட்டார்.

‘‘ஆமாம்,’’ அரையர் பதிலளித்தார். ‘‘‘தன்சேறை எம்பெருமான் தாள் தொழுவார், காண்மின் என் தலைமேலாரே’ என்று ஆழ்வார் சுவாமிகள் பாசுரம் சொல்லியிருக்கிறார். இந்த மாமதலைப் பிரானை நான் தொழுவேனானால், என் பாதங்களைத் தன் சிரசின் மீது ஆழ்வார் வைத்துக்கொள்வது போலாகும் அல்லவா? அதனால் இந்த வகையில் நான் அவருக்கு அவமரியாதை செய்ய மாட்டேன்,’’ என்று நாதழுதழுக்கச் சொன்னார். அந்த அளவுக்கு திருமங்கையாழ்வார் சாரநாதப் பெருமாளிடமும், அவரது அடியார்களிடமும் பெரும் பக்தியும், நன்மதிப்பும் வைத்திருந்தார்.

இதுமட்டுமல்ல; இந்தப் பெருமாளே ‘என் பாதத்தை உன் சிரசில் வைக்கலாமா?’ என்று திருமங்கையாழ்வாரிடம் அனுமதி கேட்டபோது மறுத்துவிட்டார் ஆழ்வார்! ‘‘‘உற்றதும் உன் அடியார்க்கு நான் அடிமை’ என்று பாடிவிட்டதால், உம் அடியாரின் திருப்பாதங்களுக்காகத்தான் என் சிரசே தவிர உமக்கல்ல,’’ என்று சொல்லிவிட்டார். பெருமாளுக்கு எப்படியாவது ஆழ்வாருடன் சம்பந்தம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று விழைந்த பெருமாள், ‘சரி, உம் இதயத்திலாவது எனக்கு இடம் கொடும்,’ என்று கெஞ்சி கேட்க, ‘‘அதெப்படி?’’ என்று ஆழ்வார் திருப்பிக் கேட்டார். ‘‘எம்பெருமான் தாள் தொழுவார்தான் எப்போதும் என் மனத்தே இருக்கின்றாரே; அங்கும் உமக்கு இடமில்லை, போம்’’ என்றும் சொல்லிவிட்டதாக நயமான பாசுர விளக்கம் நமக்குக் கிடைக்கிறது!

தஞ்சையை ஆண்டு வந்தார் அழகிய மணவாள நாயக்க மன்னர். மன்னார்குடி ராஜகோபாலன் திருக்கோயிலைப் புனரமைப்பு செய்யும் தொண்டை மேற்கொண்டார் அவர். அதற்காக பல வண்டிகளில் கட்டுமானப் பொருட்களை ஏற்றி, மன்னார்குடிக்கு அனுப்பிவைத்தார். இந்தப் பணியைச் செவ்வனே ஆற்றவேண்டிய பொறுப்பை, அவர் தன் அமைச்சரான நரச பூபாலரிடம் ஒப்படைத்தார்.

மன்னரின் கட்டளையை ஏற்றுக்கொண்ட நரச பூபாலருக்கு மனசுக்குள் ஓர் ஏக்கம். மன்னார்குடி ராஜகோபாலன் கோயிலை புனரமைப்பது சரி, இதோ, பக்கத்திலிருக்கும் திருச்சேறை சாரநாதர் கோயிலையும் அந்தத் திருப்பணியில் சேர்த்துக்கொள்ளலாமே என்று யோசித்தார் அவர். ஆனால் அதை மன்னரிடம் சொன்னால் அவர் எப்படி அதை எடுத்துக்கொள்வாரோ என்று குழப்பமாக இருந்தது. திடீரென்று மன்னர் கோபம் கொண்டாரானால், ராஜகோபாலருக்கான திருப்பணியும் பாதிக்கப்படக்கூடும் என்று கருதினார். அதனால் ஒரு தந்திரம் செய்தார். மன்னரிடம் தெரிவிக்காமலேயே, மன்னார்குடிக்கு அனுப்பப்படும் ஒவ்வொரு வண்டியிலிருந்தும் ஒரு கல் அல்லது ஏதேனும் ஒரு கட்டுமானப் பொருள் என்று எடுத்து வைத்துக்கொண்டார். இப்படி எடுத்து வைத்துக்கொண்ட பொருட்களை சாரநாதர் கோயில் புனரமைப்புக்குப் பயன்படுத்திக்கொள்ள நினைத்தார்.

இந்த விவரத்தைக் கேள்விப்பட்ட மன்னர், அது உண்மைதானா என்று தாமே நேரடியாக சோதித்து அறிந்துகொள்ள பொருட்கள் அனுப்பப்படும் பகுதிக்கு வந்தார். மன்னர் அங்கே வருகிறார் என்பதைத் தெரிந்துகொண்ட பூபாலர், தன் திருட்டை மன்னர் கண்டுபிடித்துவிட்டாரோ என்று பயந்து, மன்னார்குடி ராஜகோபாலனிடமே தன்னைக் காத்தருளுமாறு மானசீகமாக வேண்டிக்கொண்டார்.

மன்னர் அந்தப் பகுதிக்கு வந்ததும் அவருக்கு ஒரு பேரொளி காட்சி தந்தது. முதலில் மன்னார்குடி ராஜகோபாலானத் தோன்றிய அந்த உரு, உடனே திருச்சேறை சாரநாதனாக மாறியது. மறுபடியும் ராஜகோபாலன், மறுபடியும் சாரநாதன்… மன்னர் விழித்துக்கொண்டார். ராஜகோபாலன், சாரநாதன் இருவரும் ஒருவரே! சோதிக்க வந்த தானே பெருமாளால் சோதனைக்குள்ளாக்கப்பட்டு, தெளிவடைந்த சந்தோஷத்தில், நரச பூபாலனைப் பாராட்டினார் மன்னர். திருச்சேறை கோயிலுக்கும் தேவையான திருப்பணியை மேற்கொண்டதோடு, மிகப் பெரிய நிலப்பரப்பையும் இந்தக் கோயிலுக்கு தானமாக அளித்தார்.

இந்த சம்பவத்தையும், தகவலையும் இக்கோயிலில் உள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது. மாவாடிப் பள்ளம் என்றப் பகுதியைச் சேர்ந்த பாபாசாஹேப் என்ற முகமதியர், சாரநாதனை வேண்டி புத்திர பாக்கியம் பெற்றதும், அதன் நன்றிக்கடனாக நிலங்களை தானமளித்ததும்கூட கல்வெட்டுகளிலிருந்து அறிய முடிகிறது.

தியான ஸ்லோகம்
ஸ்ரீமத் ஸார ஸரோஜிநீ தடபுவி ஸ்ரீஸார நாதோ ஹரி:
புண்யம் ஸார விமாந மத்ர மஹிஷீ ஸ்ரீஸார நாயக்ய ஸௌ
க்ஷேத்ரம் ஸாரமதீவ ஸஹ்ய கிரிஜா க்ருத்வா தபோ துஷ்கரம்
கங்காதிக்யமவா பதத்ர ஹரிணா ப்ராசீ முகே நாதநாத்

எப்படிப் போவது: கும்பகோணம் – திருவாரூர் சாலையில் 24 கி.மீ. தொலைவிலும், நாச்சியார் கோயிலிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும் உள்ளது திருச்சேறை சாரநாதன் திருக்கோயில். கும்பகோணம் அல்லது திருவாரூர் அல்லது நாச்சியார் கோயிலிலிருந்து பேருந்து, ஆட்டோ, வாடகைக் கார் வசதிகள் உண்டு.
கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 7.30 முதல் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 முதல் 9 மணிவரையிலும்.
முகவரி: அருள்மிகு சாரநாதப் பெருமாள் திருக்கோயில், திருச்சேறை, திருச்சேறை அஞ்சல், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர்-612605.

The post திருச்சேறை சாரநாதப் பெருமாள் appeared first on Dinakaran.

Tags : Thiruchera Sarnath Perumal ,Tiruchera ,Perumal ,
× RELATED வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்