×

நாட்டை பிளவுபடுத்தும் பாஜகவை தவெக மாநாட்டில் விஜய் ஏன் விமர்சிக்கவில்லை? : ஜவாஹிருல்லா கேள்வி!

சென்னை: நாட்டை பிளவுபடுத்தும் பாஜகவை தவெக மாநாட்டில் விஜய் ஏன் விமர்சிக்கவில்லை? என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டை மொழி உள்பட பல்வேறு பாகுபாடுகளால் பா.ஜ.க. பிளவுபடுத்துவதாக ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி அளித்தார். பா.ஜ.க.வை விஜய் விமர்சிக்காதது மிகப்பெரிய கேள்வியாக அமைந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, பின்னர் உரையாற்றிய மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறியதாவது; ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நாட்டை சர்வாதிகாரத்திற்கு அழைத்துச் செல்லும் தீய நோக்கத்தில் மோடி பேச்சு அமைந்துள்ளது என்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் மூலம் பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஜனாதிபதி ஆட்சியை கொண்டுவர நினைப்பது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.

மாநிலங்களின் உரிமையை பறிக்கக் கூடிய செயல். ஒரு மாநிலத்தில் நடைபெறும் தேர்தலையே பல கட்டங்களாக நடத்தும் நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் எவ்வாறு சாத்தியமாகும்? மாநிலப் பிரச்சனைகளை மையமாக கொண்டு சட்டமன்றத் தேர்தலும், நாடு தழுவிய பிரச்சினைகளை கொண்டு பாராளுமன்ற தேர்தலும் நடைபெற்று வரும் நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறை சாத்தியமற்றது.

ஒன்றிய அரசின் ரயில்வே நிர்வாகம் எந்த அளவிற்கு மோசமாக உள்ளது என்பதற்கு தடம் புரளும் ரயில் விபத்துகளின் காட்சிகள் அமைந்துள்ளன. மோடி ஆட்சியில் ரயில்வே நிர்வாகம் எந்தளவு சீர்கெட்டு உள்ளது என்பது ரயில் விபத்துகளில் தெரிகிறது. காங்கிரஸ் ஆட்சியில் ரயில்வே நிர்வாகம் நேர்த்தியாக செய்யப்பட்டது, மதுரைக்கு செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் விரைவாக சென்ற நிலையில், தற்போது வெறும் அலங்காரத்திற்காக வந்தே பாரத் ரயில்களை இயக்கி மக்களை ஏமாற்றுகின்றனர்.

திமுக கூட்டணி 2026ல் பிரியும் என ஜோசியக்காரர்கள் சொல்வதை நம்புவதில்லை. நடிகர் விஜயின் செயல்பாடுகள் எதிர்காலத்தில் எப்படி அமைய உள்ளது என்பதை பொறுத்தே அந்த கட்சியை எடை போட முடியும். ஒரே மாநாடு, ஒரே உரையை மட்டுமே வைத்து முடிவுக்கு வர முடியாது. திமுகவை நேரடியாக விமர்சித்த விஜய் பாஜகவை விமர்சிக்கவில்லை, மொழி உட்பட பல்வேறு பாகுபாடுகளால் நாட்டை பிளவுபடுத்தும் பாஜகவை ஏன் விஜய் விமர்சிக்கவில்லை என்பது மிகப்பெரிய கேள்வியாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.

 

The post நாட்டை பிளவுபடுத்தும் பாஜகவை தவெக மாநாட்டில் விஜய் ஏன் விமர்சிக்கவில்லை? : ஜவாஹிருல்லா கேள்வி! appeared first on Dinakaran.

Tags : Vijay ,BJP ,Dweka conference ,Jawahirulla ,Chennai ,Jawahirullah ,Humanist People's Party ,J. K. ,M. M. K. ,. J. K. Wa ,
× RELATED யூடியூப் சேனல் மீது நடவடிக்கை...