- Icourt
- கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு
- சென்னை
- சென்னை உயர் நீதிமன்றம்
- மாவட்ட சட்ட விவகார ஆணையம்
- என்.சி.சி
- கிருஷ்ணகிரி
- கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்பணிகள் குழு
- தின மலர்
சென்னை: கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்திய மேலும் மூன்று பள்ளிகளில் நேரில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை இழைத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற கோரி வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார் மற்றும் பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ். ராமன் மற்றும் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆகியோர் வழக்கின் விசாரணை குறித்த அறிக்கைகளை தாக்கல் செய்தனர்.
மேலும், நான்கு பள்ளிகளில் போலி என்சிசி முகாம் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் வேறு பள்ளிகளில் போலி என்சிசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதா என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.
முக்கிய குற்றவாளியான சிவராமன் மரணம் தொடர்பான வழக்கில் சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம் என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், போலி என்சிசி முகாம் நடத்தியதாக கூறப்படும் ஒரு பள்ளியில் மட்டுமே மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
மற்ற மூன்று பள்ளிகளிலும் நேரில் விசாரணை நடத்தி மாணவிகளின் மனநலம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு ஆய்வு செய்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். சிவராமன் மரணம் தொடர்பாக விசாரணை அறிக்கையை சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விரைந்து தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 13ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
The post போலி என்சிசி முகாம் நடத்திய 3 பள்ளிகளில் நேரில் விசாரணை நடத்தி அறிக்கை தர வேண்டும்: கிருஷ்ணகிரி மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழுவுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.