×

தீபாவளித் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி..!!

சென்னை: தீபாவளித் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில்; நாடு முழுவதும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க, தீபத் திருநாளாம் தீபாவளித் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் அன்பிற்கினிய மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

நரகாசுரன் எனும் கொடிய அரக்கன் தனது கொடுஞ்செயல்களால் மக்களையும், தேவர்களையும் பெருந்துன்பத்திற்கு ஆளாக்கினான். அக்கொடியவனை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் இந்த நன்னாளில், மக்கள் புத்தாடைகளை அணிந்து இறைவனை வழிபட்டு, இல்லந்தோறும் மகிழ்ச்சி பொங்க இனிப்புகளைப் பரிமாறி, பட்டாசுகளை வெடித்து உறவினர்களுடனும், நண்பர்களுடனும் கொண்டாடி மகிழ்வார்கள்.

தித்திக்கும் இந்த இனிய தீபாவளித் திருநாளில், மக்கள் அனைவரது வாழ்விலும் துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருகட்டும்; இன்று பெருகும் இன்பம் அனைவரிடமும் என்றென்றும் நிலைத்திருக்கட்டும். மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று இன்பமுடன் வாழ்ந்திட வேண்டும் என்று மனதார வாழ்த்தி, அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post தீபாவளித் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி..!! appeared first on Dinakaran.

Tags : EDAPPADI PALANISAMI ,DIPAWALI ,Chennai ,General ,Edapadi Palanisami ,Diwali ,General Secretary ,Eadapadi Palanisami ,
× RELATED மகிழ்ச்சி பொங்கிட, உவகைப் பெருக்குடன்...