×
Saravana Stores

மாணவ, மாணவியரின் பாதுகாப்புக்காக பள்ளி வாகனங்களில் கேமரா, சென்சார் கருவி அவசியம் : மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், மாணவ, மாணவியரின் பாதுகாப்புக்காக பள்ளி வாகனங்களில் கேமரா, சென்சார் கருவி அவசியம் பொருத்த வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். நாமக்கல் அரசு ஆண்கள் தெற்கு மேல்நிலைப்பள்ளி கலையரங்கில், மாவட்டத்திலுள்ள தனியார் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கல்வி அலுவலர் ஜோதி (தனியார் பள்ளிகள்) தலைமை வகித்தார். இதில் தனியார் பள்ளிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், மாணவர்களின் கல்வி திறன், அவர்களுக்கான பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர் ஜோதி பேசியதாவது:

பள்ளி வாகனங்களை முறையாக பராமரித்து, விபத்துக்கள் எதுவும் நிகழாமல் இருக்க, பள்ளி நிர்வாகிகள் தனிக்கவனத்துடன் வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும். பள்ளி வாகனத்தில் கேமரா மற்றும் சென்சார் கருவிகள் கட்டாயம் பொருத்த வேண்டும். வாகனங்களில் ஆண் மற்றும் பெண் பாதுகாவலர்கள் கட்டாயம் இருக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் சாரண, சாரணியர் இயக்கம் மற்றும் அன்னையர் குழு துவங்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ்களுக்கு நகல் வைத்திருக்க வேண்டும். மாற்றுச்சான்றிதழ் விண்ணப்பத்தை நகலுடன் சேர்த்து, பைண்டிங் செய்து பராமரிக்கவேண்டும். ஆசிரிய, ஆசிரியைகள் கற்றல் கற்பித்தலின் போது, கரும்பலகையை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.

பாடம் நடத்தும் போது, பாடகுறிப்பேட்டை மேஜையின் மீது வைத்திருக்கவேண்டும். மேலும், கட்டாயம் எதாவது ஒரு கற்றல் உபகரணப் பொருட்களை பயன்படுத்தி, மாணவர்களுக்கு புரியும் வகையில், பாடம் நடத்த வேண்டும். அப்போது தான் மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் எளிமையாகும். பள்ளிகளில், ஆலோசனை மன்றம், மாணவர் மனசு, போதை பொருள் விழிப்புணர்வு மன்றம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் போன்றவை இருக்க வேண்டும். பள்ளியில் உள்ள மாணவ, மாணவியரின் பாதுகாப்பிற்கு, பள்ளி நிர்வாகமே முழு பொறுப்பு ஏற்க வேண்டும். பள்ளி நூலகங்களை நல்ல முறையில் பராமரித்து, மாணவர்களுக்கு உதவும் வகையில் அமைக்க வேண்டும்.

மாணவ, மாணவியரின் பாதுகாப்பை, மாணவர்கள் பள்ளி வாகனத்தில் ஏறும்போதும், இறங்கும் போதும், காலை மற்றும் மாலை நேரத்தில் கண்காணிக்க வேண்டும். மதிய உணவு இடைவேளையின் போதும், மாணவர்களை கண்காணிக்க வேண்டும். இடைவேளைக்கு பிறகு, அனைத்து மாணவர்களும் வகுப்பறையில் இருக்கிறார்களா என்பதை ஆசிரியர்கள் உறுதி செய்து கொள்ளவேண்டும்.

பள்ளியில் எந்தவிதமான பராமரிப்பு பணிகளையும், பள்ளி வேலைநாட்களில் செய்யக்கூடாது. சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களிலும், பள்ளியின் வேலை நேரம் முடிந்தவுடனும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளலாம். மாணவர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பிற பணியாளர்களுக்கு சுத்தமான, சுகாதாரமான குடிநீரை அளிக்க வேண்டும். இவ்வறு அவர் தெரிவித்தார். இந்த கூட்டத்தில், மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் விவேக் மற்றும் தனியார் பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

The post மாணவ, மாணவியரின் பாதுகாப்புக்காக பள்ளி வாகனங்களில் கேமரா, சென்சார் கருவி அவசியம் : மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Namakkal Government Men ,South ,Secondary School ,Art ,Gallery ,Dinakaran ,
× RELATED நாமக்கல் மாவட்டம் பொம்மை குட்டைமேடு...