×

போலி நிறுவனம் நடத்தி மோசடி ரூ.26.40 லட்சம் ஜிஎஸ்டி கட்டும்படி பீடி சுற்றும் தொழிலாளிக்கு நோட்டீஸ்: கலெக்டரிடம் புகார்

திருப்பத்தூர்: போலி நிறுவனம் நடத்தி மோசடி செய்த மர்மநபர்களால், ரூ.26.40 லட்சம் ஜிஎஸ்டி கட்டும்படி பீடி சுற்றும் தொழிலாளிக்கு நோட்டீஸ் வந்துள்ளது. அவர் இது குறித்து நடவடிக்கை கோரி திருப்பத்தூர் கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளார். திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் நேற்று நடந்தது. இதில் நாட்றம்பள்ளி தாலுகா ரெட்டியூர் அடுத்த பெரியகம்மியம்பட்டை சேர்ந்த அப்சர்(35) என்பவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நானும் எனது தந்தையும் பீடி சுற்றும் வேலை செய்து வாழ்ந்து வருகிறோம். கடந்த மாதம் 27ம் தேதி சென்னையில் உள்ள வணிகவரி மற்றும் பதிவுத்துறை உதவி கமிஷனர் அலுவலகத்தில் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது.

அதில், நான் அப்சர் டிரேடர்ஸ் என்ற நிறுவனம் வைத்து இருப்பதாகவும், அந்த நிறுவனத்தின் ஜிஎஸ்டி மற்றும் பெனால்டியையும் சேர்த்து மொத்தம் ரூ.26 லட்சத்து 40 ஆயிரத்து 502 கட்ட வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. நானே கூலிவேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறேன். எனது பெயரில் அடையாளம் தெரியாத நபர்கள் யாரோ எனது பான்கார்டு மூலம் போலியான ஆவணங்கள் தயாரித்து ஜிஎஸ்டி மற்றும் நிதி மோசடி செய்து மேற்கண்ட நிறுவனத்தை மூடி உள்ளனர். மேலும், ஜோலார்பேட்டையில் நான் கணக்கு வைத்துள்ள வங்கியில் இருந்தும் கடந்த 5ம் தேதி மேலே கூறிய பணத்தை கட்ட வேண்டும் என எனக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். இதனால் நாங்கள் மிகவும் வேதனையடைந்து மன உளைச்சலில் தவித்து வருகிறோம். எனவே, எனது பெயரில் மோசடி செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு வந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post போலி நிறுவனம் நடத்தி மோசடி ரூ.26.40 லட்சம் ஜிஎஸ்டி கட்டும்படி பீடி சுற்றும் தொழிலாளிக்கு நோட்டீஸ்: கலெக்டரிடம் புகார் appeared first on Dinakaran.

Tags : Tirupathur ,Tirupathur Collector ,Beedi ,Dinakaran ,
× RELATED பச்சிளம் குழந்தைகளுக்கு சிறப்பு...