×

பிரான்சுக்கு சுற்றுலா சென்ற பள்ளி ஆசிரியர்கள் சென்னை திரும்பினர்

சென்னை: பிரான்ஸ் நாட்டுக்கு கல்விச் சுற்றுலா சென்ற கனவு ஆசிரியர் விருது பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் நேற்று சென்னை திரும்பினர். ஆசிரியர்களுள் தனித்திறன் பெற்று விளங்கும் ஆசிரியர்களை இனம் கண்டு அவர்களது தொழில்சார் அறிவு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு மேலும் சிறப்பான பல வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதல்படி, கனவு ஆசிரியர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 380 ஆசிரியர்களுக்கு 19.2.2023 அன்று நாமக்கல்லில் நடைபெற்ற விழாவில் பாராட்டுச் சான்றும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதில் 90 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்ற 55 ஆசிரியர்கள் வெளிநாட்டு கல்விச் சுற்றுலாவிற்கு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டு இம்மாதம் 23ம் தேதி முதல் 28 வரை 6 நாட்கள் பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். தற்போது சுற்றுலா முடிந்த நிலையில், பிரான்ஸுக்கு சென்ற அனைவரும் நேற்று மாலை 7.50 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தனர். இவர்களுடன் சுற்றுலா சென்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழியும் சென்னை திரும்பினார். சுற்றுலா சென்ற ஆசிரியர்கள் அங்குள்ள கல்வி நிறுவனங்கள், பிரான்ஸ் நாட்டின் தேசிய அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர். புகழ்பெற்ற மோனலிசா ஓவியம் உள்ளிட்ட பெருமைமிகு பொருட்கள், ஓவியங்களையும் கண்டு மகிழ்ந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

The post பிரான்சுக்கு சுற்றுலா சென்ற பள்ளி ஆசிரியர்கள் சென்னை திரும்பினர் appeared first on Dinakaran.

Tags : France ,Chennai ,Minister of School Education ,
× RELATED சென்னை பட விழாவில் டிராக்டர்