புதுக்கோட்டை: பாஜவின் சி டீம் விஜய் நடத்தியது மாநாடல்ல. பிரமாண்ட சினிமா சூட்டிங் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இதுவரைக்கும் பல அரசியல் கட்சிகளுடைய ‘ஏ டீம்’, ‘பி டீம்’ பார்த்துள்ளோம். விஜய் பாஜவுடைய ‘சி டீம். தமிழ்நாடு மக்களின் வெறுப்புக்கு ஆளாகி இருக்கிற ஒருவரை பற்றி புகழ்ந்து பேசினால் எடுபடாது என்பதால் ஆளுநரை எதிர்த்து விஜய் மாநாட்டில் பேசப்பட்டுள்ளது.
யாருடைய ‘ஏடீம்’, ‘பி டீம் அல்ல என்று விஜய் கூறியுள்ளார் அவருக்கே தெரியும் அவர் சி டீம் என்று. நிச்சயம் எங்களது கூட்டணியை யாரும் பிரித்து விட முடியாது. தமிழ்நாடு முதலமைச்சர் காட்டுகின்ற பாசத்தை விட்டு யாரும் சென்று விட மாட்டார்கள். அதிமுக கட்சி தமிழ்நாட்டில் எடுபடாது என்பது விஜய்க்கு தெரிந்துள்ளது. அதிமுகவை அவர் கட்சியாகவே எடுத்து கொள்ளவில்லை. அங்கிருக்கும் தொண்டர்களை இழுக்க வேண்டும் என்பதுதான் அவரது குறிக்கோள்.
பாஜவுக்கு வலுவூட்டுகின்ற வகையில் அதிமுக தொண்டர்களை தன் பக்கம் இழுப்பதற்காக அதிமுகவை பற்றி அவர் குறிப்பிடவில்லை. நேற்று (நேற்றுமுன்தினம்) நடந்த மாநாடு எங்களை பொறுத்தவரை பிரமாண்டான சினிமா ஷூட்டிங் என்றே சொல்லலாம்.
திராவிடம் என்பது தமிழ் மண்ணில் இருந்து அகற்றப்பட முடியாத ஒன்று.
திராவிடம் இல்லாமல் தமிழ்நாடு இல்லை. இந்தியாவிலேயே சிறுபான்மையினர் நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பது திமுக தான். அதற்காக நாங்கள் எவ்வளவு இழந்திருக்கின்றோம் என்பது நாடறிந்த உண்மை. எந்த கட்சியும் கொள்கைக்காக ஆட்சியை இழந்ததாக வரலாறு கிடையாது. கொள்கைக்காக இரு முறை ஆட்சியை இழந்தது திமுக என்பதை யாரும் மறந்து விட வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.
The post விஜய் நடத்தியது மாநாடல்ல பிரமாண்ட சினிமா சூட்டிங்: அமைச்சர் ரகுபதி கருத்து appeared first on Dinakaran.