×
Saravana Stores

லாட்டரி அதிபர் மார்ட்டின் மீதான வழக்கை முடித்து வைத்த விசாரணை நீதிமன்ற உத்தரவு ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரது மனைவி உள்ளிட்டோருக்கு எதிரான முறைகேடு வழக்கை முடித்து வைத்த விசாரணை நீதிமன்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை நங்கநல்லூரை சேர்ந்த நாகராஜன் என்பவரது இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, ரூ.7 கோடியே இருபது லட்சத்து ஐயாயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. இது, தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், மார்டின் உள்ளிட்டோருடன் இணைந்து கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த தொகை என நாகராஜன் வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து, நாகராஜன், மார்ட்டின், மார்ட்டின் மனைவி லீமா ரோஸ் உள்ளிட்ட நான்கு பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை அடிப்படையாக வைத்து சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்தது.

இந்நிலையில், இந்த விவராகத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்பதால் வழக்கை முடித்து வைக்கக்கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆலந்தூர் நீதிமன்றத்தில் 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் அறிக்கை தாக்கல் செய்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மார்டின் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை முடித்து வைத்தது. இதனை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், இந்த விவகாரத்தில் மோசடி நடைபெற்றதற்கான ஆதாரங்களும் இருந்த நிலையிலும் போலீசார் அறிக்கையை ஏற்று நீதிமன்றம் வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது தவறு என்று வாதிட்டார்.

மத்திய குற்றப்பிரிவு சார்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் அறிக்கையை ஏற்று வழக்கை முடித்து வைத்து நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அதனை எதிர்த்து மனுத்தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என வாதிட்டார். அதேபோன்று, மார்ட்டின் உள்ளிட்டோர் சார்பிலும் அமலாக்கத்துறை மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள், மார்ட்டின் உள்ளிட்டோர் மீதான வழக்கை முடித்து வைத்த ஆலந்தூர் நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. வழக்கின் விசாரணையை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மற்றும் அமலாக்கத்துறை தொடரலாம். வழக்கைப் பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசாரே இந்த வழக்கை முடித்து வைக்குமாறு அறிக்கை தாக்கல் செய்தது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ளனர்.

The post லாட்டரி அதிபர் மார்ட்டின் மீதான வழக்கை முடித்து வைத்த விசாரணை நீதிமன்ற உத்தரவு ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Martin ,Chennai High Court ,Chennai ,Nagarajan ,Nanganallur, Chennai ,Dinakaran ,
× RELATED மார்ட்டின் வழக்கு: விசாரணை நீதிமன்ற உத்தரவு ரத்து