×
Saravana Stores

எதை பற்றியும் கவலைப்படாமல் பணியாற்றுங்கள் மற்றதை நாங்கள் பார்த்து கொள்கிறோம்: ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (28-10-2024) சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்ற சட்டமன்றத் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கி உரையாற்றினார்.

நாடாளுமன்றத் தேர்தலில் நூற்றுக்கு நூறு வெற்றியைப் பெற்றுச் சில மாதங்கள்கூட ஆகவில்லை, அதற்குள் அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராக இங்குக் கூடியிருக்கிறோம். சட்டமன்றத் தேர்தலிலும் நாம்தான் வெற்றி பெறப் போகிறோம். அதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால், நம்முடைய அந்த வெற்றியும் நூற்றுக்கு நூறு வெற்றியாக இருக்க வேண்டும். நம்முடைய இலக்கு 200 தொகுதிகள். அதற்கான உழைப்பை, நீங்கள் இன்றிலிருந்தே தொடங்கியாக வேண்டும்!

அதற்காகத்தான் இப்போதே 234 தொகுதிகளுக்கும் தொகுதிப் பார்வையாளர்களை நியமித்துள்ளோம். புதிதிகப் பொறுப்பேற்றுள்ள அனைத்துத் தொகுதிப் பார்வையாளர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் தொகுதியில் கழகமும் நம்முடைய கூட்டணியும் மகத்தான வெற்றி பெறுவதை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு உங்களுக்குத்தான் இருக்கிறது; மறந்துவிடாதீர்கள். மாநில நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட அமைப்பாளர்கள் என்று 234 பேரை, தொகுதிக்கு ஒருவர் என்று அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பார்வையாளர்களாக நியமித்துள்ளோம்.

நீங்கள் அனைவரும், பொறுப்பு அமைச்சர்கள் , மாவட்டக் கழகச் செயலாளர்களைச் சந்தித்து, அவர்கள் ஆலோசனைப்படி பணிகளைத் தொடங்க வேண்டும். இந்தப் பணிகளில் மாவட்டக் கழகச் செயலாளர்களுக்கு உறுதுணையாக இருந்து, அவர்களின் வழிகாட்டலின்படி, தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பு, தொகுதி பார்வையாளர்களான உங்களைத்தான் சாரும்.

அடுத்த ஓராண்டுகாலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்குத் தொகுதியை முழுமையாகத் தயார்படுத்தும் பொறுப்பும் உங்களுடையதுதான். உங்களுடைய பணிகளில் ஏதாவது உதவி தேவைப்பட்டாலோ, இல்லை சந்தேகம் இருந்தாலோ தலைமைக் கழகத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.

தொகுதிப் பணியாளராக நியமிக்கப்பட்டுள்ள தொகுதியில், முழுமையாக வெற்றி பெறுவதற்கான வழிவகைகளைக் கண்டறிந்து பணியாற்றுங்கள். உங்கள் யார் மேலும் தனிப்பட்ட முறையில் எந்தப் புகாரும் சொல்ல முடியாத அளவிற்குப் பணியாற்றுங்கள்.

உங்களின் ஒவ்வொரு அடியும், வெற்றியை நோக்கிய பயணமாக அமைய வேண்டும். இந்தியாவில் எந்த ஆட்சியும் செய்யாத மகத்தான சாதனைகளை நாம் செய்து கொண்டிருக்கிறோம். அதனால்தான், இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு உயர்ந்திருக்கிறது என்று என்னால் நெஞ்சை நிமிர்த்திச் சொல்ல முடியும்.

இந்தச் சாதனைகளை மக்களிடையே பரப்புரை செய்ய வேண்டும். முறையாகப் பரப்புரை செய்யப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டும். நம்முடைய திராவிட மாடல் ஆட்சியால் பயனடைந்த மக்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்களே நமக்கு மிகப்பெரிய பரப்புரையாளர்கள்.

புதுப்புது பாணிகளைக் கையில் எடுத்து, தேர்தல் பணிகளை முடுக்கிவிட வேண்டிய கடமை உங்களுக்கு உண்டு. தலைவர் கலைஞர் அவர்கள் தனக்குப் பிடித்த ஊரின் பெயராக, தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ‘எப்போதும் வென்றான்’ ஊரைச் சொல்வார்.

எப்போதும் வென்றானாக நாம் பெயர் பெற வேண்டும் என்றால், எப்போதும் உழைக்க வேண்டும்! எப்போதும் செயல்பட வேண்டும்! எப்போதும் பணியாற்றிக் கொண்டே இருக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை கூட்டத்தில் கூறியுள்ளார்.

The post எதை பற்றியும் கவலைப்படாமல் பணியாற்றுங்கள் மற்றதை நாங்கள் பார்த்து கொள்கிறோம்: ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister MLA. K. Stalin ,Chennai ,Chief Minister ,Tamil Nadu ,K. Stalin ,Assembly Constituency Visitors' Consultation Meeting ,Anna Education Artist Hall ,Mu. K. Stalin ,
× RELATED அரசு மேற்கொண்ட மழைநீர் வடிகால் பணிகள்...