×
Saravana Stores

பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் அரங்கத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் அரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். தற்காலிகமாக அமைக்கப்படும் பந்தலுக்கு பதில் கட்டப்பட்டுள்ள அரங்கத்தை திறந்து வைத்தார். ரூ.1.55 கோடியில் கட்டப்பட்ட இரண்டு மண்டபங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார். அக்.30-ம் தேதி பசும்பொன் நினைவிடத்தில் மரியாதை செலுத்த முதலமைச்சர் பசும்பொன் செல்கிறார்.

தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று வீர முழக்கம் இட்ட சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் தேவர் திருமகனார் அவர்கள் இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் என்கிற சிற்றூரில் மிகுந்த வசதி படைத்த ஜமீன் குடும்பத்தில், 1908-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 30-ஆம் நாள் பிறந்தார்.

ஆங்கிலேய அரசை எதிர்த்துப் போராட, சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவத்திற்கு தமிழகத்தில் இருந்து பெரும் படையினைத் திரட்டி அனுப்பிய பெருமை தேவர் பெருமகனார் அவர்களையேச் சாரும்.

1920-ஆம் ஆண்டுகளில் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் அமலில் இருந்த மிகவும் கொடுமையான குற்றப்பரம்பரை என்கிற சட்டத்திற்கு எதிராக முதன் முதலில் போராடி அச்சட்டத்தினை அகற்றியவர் தேவர் பெருமகனார் ஆவார்.

1952-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் அருப்புக்கோட்டை பாராளுமன்ற தொகுதியிலும், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றி என பல்வேறு உச்சங்களைத் தொட்டவர் தேவர் பெருமகனார். ஆன்மீகம், தேசியம், பொதுவுடைமை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு ஆகிய முக்கியக் கொள்கைகளைத் தன் வாழ்நாளில் இறுதிவரை உறுதியாகப் பின்பற்றியவர். ‘வங்கத்தில் நேதாஜி; தமிழகத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்’ எனத் தலைவர் கலைஞர் அவர்களால் போற்றப்பட்டவர்.

* முத்துராமலிங்கத் தேவர் அவர்களை சிறப்பிக்கும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மேற்கொண்ட பணிகள்

முத்துராமலிங்கத் தேவர் அவர்களுக்கு, மதுரை மாநகரில் கண்டோர் பிரமிக்கும் வகையில் 12 அடி உயர பீடத்தில் 13 அடி உயரமுள்ள பிரம்மாண்டமான வெண்கலச் சிலையைத் திறந்துவைத்து அவரைப் போற்றினார் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்; தேவர் திருமகனார் தோன்றிய பசும்பொன் மண்ணில் அவருக்கு நினைவில்லம் கட்டினார்; தேவர் சமூதாய மக்கள் பயன்பெறும் வகையில் நெல்லை மாவட்டம், மேல்நீலிதநல்லூர், இராமநாதபுரம் மாவட்டம், கமுதி, மதுரை மாவட்டம், உசிலம்பட்டி – ஆகிய இடங்களில் தேவர் பெருமகனாரின் திருப்பெயரில் மூன்று அரசு கலைக் கல்லூரிகள் அமைத்தார்; மதுரை ஆண்டாள்புரம் அருகே 75 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட மேம்பாலத்திற்கு, “முத்துராமலிங்கத் தேவர் பாலம்” எனப் பெயர் சூட்டினார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தேவர் பெருமகனார் திருப்பெயரில் மாணவச் செல்வங்களுக்கு உதவித் தொகை வழங்கிடும் வகையில் 25 இலட்சம் ரூபாய் முதலீட்டில் கல்வி அறக்கட்டளையை ஏற்படுத்தினார்.

2007-ஆம் ஆண்டு முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் நூற்றாண்டு விழா முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு, பசும்பொன் கிராமத்தில், 10 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய்ச் செலவில் தேவர் திருமகனார் வாழ்ந்த இல்லத்தைப் புதுப்பித்து, 9 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய்ச் செலவில் நூற்றாண்டு விழா வளைவையும், 9 இலட்சம் ரூபாய்ச் செலவில் புகைப்படக் கண்காட்சிக் கூடத்தையும் அமைத்தார்.

மேலும், 3 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய்ச் செலவில் அணையா விளக்கு அமைத்து, 4 இலட்சம் ரூபாய்ச் செலவில் நூலகக் கட்டடம், தேவர் ஜெயந்தியின் போது பால்குடங்கள் வைப்பதற்கு 5 இலட்சம் ரூபாய்ச் செலவில் மண்டபம், 5 இலட்சம் ரூபாய்ச் செலவில் முளைப்பாரி மண்டபம் போன்ற பல்வேறு பணிகளை தேவர் திருமகனாரின் புகழினை போற்றிடும் வகையில் மேற்கொண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சிறப்பித்தார்.

இத்தகைய சிறப்புகளை கொண்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்தநாள் தேவர் ஜெயந்தி விழாவாக தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் அக்டோபர் 30-ஆம் நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள “தெய்வீகத் திருமகனார் உ. முத்துராமலிங்கத் தேவர் அரங்கம்” திறந்து வைத்தல் தேவர் ஜெயந்தி விழாவின்போது, கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாத்திட, ஒரு நிரந்தர மண்டபம் அமைத்து தர வலியுறுத்தி பொதுமக்கள் நீண்ட நாட்களாக அரசுக்கு வைத்த கோரிக்கையினை ஏற்று, பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்கதேவர் நினைவிடத்தின் இரு நுழைவாயில்களிலும் ஆண்டுதோறும் தற்காலிகமாக அமைக்கப்படும் பந்தலுக்கு பதிலாக பொதுமக்கள் நலன்கருதி 1 கோடியே 55 இலட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு மண்டபங்கள் தமிழ்நாடு அரசால் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் 28.10.2023 அன்று அறிவிப்பு செய்யப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படி, இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கதேவர் அவர்களின் நினைவிடத்தில் 1 கோடியே 55 இலட்சத்து 34 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தெய்வீகத் திருமகனார் உ. முத்துராமலிங்கத் தேவர் அரங்கத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் திறந்து வைத்தார்.

இந்த அரங்கத்தின் மொத்த பரப்பளவு 9848.98 சதுர அடி ஆகும். இவ்வரங்கத்தில் பொதுமக்களுக்கான காத்திருப்பு கூடம் மற்றும் மிக முக்கிய பிரமுகர்களுக்கான நிரந்தர நிழற்கூரை ஆகியவையும், பொதுமக்களுக்கான காத்திருப்பு கூடத்தில் 500 ஆண்கள் மற்றும் 500 பெண்கள் தனித்தனியாக வரிசையில் செல்லும் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள வசதி, சுப நிகழ்ச்சிகள் நடத்திட மேடை வசதி, மின்விளக்கு மற்றும் மின்விசிறி வசதிகள் போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், பால்வளம் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு.இரா.வைத்திநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ் கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், செ.முருகேசன், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் அரங்கத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Muthuramalinga Devar Arena ,Pasumpon ,Chennai ,Secretariat ,M.K.Stalin ,Pasumbon ,Dinakaran ,
× RELATED விளையாட்டுத் துறையில் உலகத்தையே...