சென்னை: விஜய் ஏ டீமும் இல்லை, பி டீமும் இல்லை, பாஜகவின் சி டீம் என அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். “நேற்று நடைபெற்ற தவெக மாநாடு பிரமாண்ட சினிமா மாநாடு; அதிமுகவின் வாக்குகளை ஈர்ப்பதற்காக, அதிமுக பற்றி விஜய் பேசவில்லை; அதிமுக தொண்டர்களை பிரிப்பதே விஜய்யின் குறிக்கோள்” எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை பதிவு செய்தார். பின்னர் தனது கட்சி கொடியையும், பாடலையும் அறிமுகப்படுத்திய விஜய், கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் என்ற இடத்தில் அக்.27ம் தேதி(நேற்று) நடைபெறும் என அறிவித்தார்.
இதற்காக நேற்று முன்தினமே மாநாட்டு திடலுக்கு நடிகர் விஜய் சென்றுவிட்டார். நேற்று காலை முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து தொண்டர்கள், ரசிகர்கள் மாநாட்டு திடலில் குவியத் தொடங்கினர். வெயில் அதிகமாக இருந்ததால் குறித்த மாலை 3 மணிக்கே மாநாடு தொடங்கியது. அப்போது பேசிய விஜய், “இந்த நாட்டையே பாழ்படுத்துற பிளவுவாத அரசியலை செய்யுறவங்கதான் (பாஜ) தவெகவின் முழுமுதல் கொள்கை எதிரி, கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிப்போம்” என பேசினார்.
இந்நிலையில் விஜய் பேசியது குறித்து அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார். அவர் கூறியதாவது; “விஜய் ஏ டீமும் இல்லை, பி டீமும் இல்லை. பாஜகவின் சி டீம். நேற்று நடைபெற்ற தவெக மாநாடு பிரமாண்ட சினிமா மாநாடு. அதிமுக பற்றி பேசினால் எடுபடாது என்பதால் திமுக பற்றி விஜய் பேசி உள்ளார்.
அதிமுகவின் வாக்குகளை ஈர்ப்பதற்காக, அதிமுக பற்றி விஜய் பேசவில்லை. அதிமுக தொண்டர்களை பிரிப்பதே விஜய்யின் குறிக்கோள். பாஜகவை வலுப்படுத்தும் வகையில், அதிமுக தொண்டர்களை பிரிப்பதே விஜய்யின் குறிக்கோள். நேற்று விஜய் கூட்டிய கூட்டம் போன்று ஏற்கனவே திமுக நிறைய கூட்டம் நடத்தி உள்ளது.
திராவிட மாடல் ஆட்சியை மக்களிடம் இருந்து பிரிக்க முடியாது. சிறுபான்மையினர் நலன் மற்றும் கொள்கைக்காக 2 முறை ஆட்சியை இழந்த கட்சி திமுக. கவர்னரை எதிர்த்து பேசினால் தான் தமிழகத்தில் எடுபடும். திராவிடம் தமிழகத்தில் இருந்து அகற்ற முடியாத சொல். இளைஞர்கள் நம்பும் ஒரு இயக்கமாக திமுக உள்ளது என்று கூறினார்.
The post விஜய் A டீமும் இல்லை, B டீமும் இல்லை, பாஜகவின் C டீம்: அமைச்சர் ரகுபதி விமர்சனம் appeared first on Dinakaran.