தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியில் மழைக்கால முன்னெச்சரிக்கையாக கால்வாய்களை தூர்வாரி சீரமைப்பது, கொசு மருந்து தெளிப்பது, கொசுப்புழு உற்பத்தியை தடுப்பது, வீடுகள் மற்றும் தனியார் நிறுவன வளாகங்களில் தண்ணீர் தேங்குவது மற்றும் டெங்கு கொசு உற்பத்தியை தடுப்பது, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக. மாநகராட்சிக்குட்பட்ட தெருக்களில் வாரம்தோறும் கொசுப்புழு வளரிடங்களான மேல்நிலை, கீழ்நிலைத் தொட்டிகள், கிணறுகள், தேவையற்ற பொருள்கள் (டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் குடங்கள்) ஆகியவற்றை கண்டறிந்து கொசுப்புழுக்கள் இருப்பின் அதனை அழித்திட நடவடிக்கை மேற்கொள்ளவும், மேலும், 23 மருந்து தெளிப்பான்கள், பேட்டரி மூலம் இயங்கும் 12 ஸ்ப்ரேயர்கள், 9 கையினால் இயங்கும் புகைப்பரப்பும் இயந்திரங்கள், 16 சிறிய புகைப்பரப்பும் இயந்திரங்கள் மற்றும் 8 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைப்பரப்பும் இயந்திரங்கள் கொண்டு கொசுக்களை கட்டுப்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தங்கும் விடுதிகள், பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள் அரசு மற்றும் மாநகராட்சி கட்டிடங்கள், புதிய கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களிலும் கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்டு அழிக்க மாநகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. டெங்குகொசு உற்பத்தியாக கூடிய நண்ணீர் தேங்கிய இடங்களிலும், டயர்கள் மற்றும் உபயோகமற்ற பொருட்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளும், அனைத்து பள்ளிகள், பூங்காக்கள், அரசு கட்டிடங்களில் உள்ள தேவையற்ற மழைநீர் தேங்கும் பொருட்களை அப்புறப்படுத்தவும், மாநகராட்சி பகுதியில் கட்டிடக் கட்டுமானங்கள் நடைபெறும் இடங்களிலும் கட்டிடக் கழிவுகள் கொட்டி வைக்கப்பட்டிருக்கின்ற இடங்களிலும், காலி மனைகளிலும் தண்ணீர் தேங்கியிருந்து அதன்மூலம் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தி இருப்பதை கண்டறியப்பட்டால் தொடர்புடையவர்களுக்கு அபராதம் விதித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தாம்பரம் மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தாம்பரம் மாநகராட்சி, 4வது மண்டலம், 53வது வார்டுக்கு உட்பட்ட 2வது தெருவில் உள்ள விஜிஎன் மார்பில் ஆர்க் அடுக்குமாடி குடிரியிருப்பு கட்டிடத்தில் பணிபுரிந்து வரும் 45 பேரில் 2 பேர் மற்றும் அருகில் வசித்து வரும் குடியிருப்பில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட குடியிருப்பு கட்டிடத்தில் தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள், டெங்கு கொசு புழு ஒழிப்பு பணியாளர்களுடன் ஆய்வு செய்தனர். அதில் 16 இடங்களில் டெங்கு கொசுப்புழு உற்பத்தி கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
The post டெங்கு கொசுப்புழு உற்பத்தி செய்த கட்டுமான நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம்: தாம்பரம் மாநகராட்சி நடவடிக்கை appeared first on Dinakaran.