இன்பால்: மணிப்பூரில் 2 இடங்களில் குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் குகி மற்றும் மெய்தி இன மக்களிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக உருமாறியது. ஓராண்டுக்கு மேலாக நீடித்து வரும் இந்த கலவரத்தில் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. கலவரத்தில் துப்பாக்கிகள், வெடிகுண்டுகளை தாண்டி டிரோன்கள், ராக்கெட் லாஞ்சர்கள் ஆகியவை பயன்படுத்தப்படுவதால் வன்முறையின் தீவிரம் குறைந்தபாடில்லாமல் நீடித்து வருகிறது.
இந்நிலையில், மணிப்பூரில் 2 இடங்களில் குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவங்கள் மேற்கு இம்பாலின் கோட்ரூக் மற்றும் பிஷ்ணுபூர் மாவட்டத்தின் ட்ரோங்லவோபியில் நடந்துள்ளது. லாம்ஷாங் காவல்நிலையத்தின் எல்லைக்குட்பட்ட கோட்ருக் சிங் லேய்காய் கிராமத்தில் நேற்றிரவு 7 மணியளவில் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகள் வைத்து குக்கி போராளிகள் தாக்குதல் நடத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கு போலீசார் பதில் தாக்குதல் நடத்தியதால் அங்கு துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த துப்பாக்கிச் சண்டை 4 மணி நேரம் நீடித்ததாக கூறப்படுகிறது. பிஷ்ணுபூர் மாவட்டத்தின் மொய்ராங் காவல்நிலையத்துக்கு அருகே 6 கி.மீ. தொலைவில் உள்ள ட்ரோங்லவோபி கிராமத்தில் இருந்து குக்கி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் என்று பிஷ்ணுபூர் மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
The post மணிப்பூரில் 2 இடங்களில் குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெற்றதால் பரபரப்பு! appeared first on Dinakaran.