×

பட்டிவீரன்பட்டி நெல்லூரில் கரையில் மண் அரிப்பால் உடையும் நிலையில் கண்மாய்: ஆயிரம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கும் அபாயம்

பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி அருகே நெல்லூரில் தாமரைக்குளம் கண்மாய் கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உண்டாகியுள்ளது. எனவே இதனை விரைந்து சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள நெல்லூர் கிராமத்தில் சுமார் 650 ஏக்கர் பரப்பளவு கொண்ட தாமரைக்குளம் கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாய் மூலமாக அப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவுள்ள நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதுமட்டுமின்றி இந்த குளம் நிரம்பி அடுத்தடுத்து உள்ள கருங்குளம், சொட்டாங்குளம் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட குளங்களுக்கு தண்ணீர் சென்று வருகிறது.

தற்போது தாமரைக்குளத்திற்கு மருதாநதி அணையிலிருந்து இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் அதிகளளவில் வந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக தாமரைக்குளம் கண்மாய் கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு உடையும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு தான் தாமரைக்குளம் கண்மாயில் ரூ.பல லட்சம் செலவில் மடைகள் கட்டப்பட்டு கரைகள் பலப்படுத்தும் பணி நடைபெற்றது. ஆனால் அதற்குள் தற்போது பெய்த மழைக்கு கரையில் மண்அரிப்பு ஏற்பட்டு கண்மாய் உடையும் நிலையில் உள்ளது. இந்த கண்மாய் உடைந்தால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. எனவே பொதுப்பணி துறை அதிகாளிகள் பலவீனமாக உள்ள தாமரைக்குளம் கண்மாய் கரைகளை முறையாக பலப்படுத்தும் பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.

The post பட்டிவீரன்பட்டி நெல்லூரில் கரையில் மண் அரிப்பால் உடையும் நிலையில் கண்மாய்: ஆயிரம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Pattiveeranpatti Nellore ,Kanmai ,Pattiveeranpatti ,Thamaraikulam Kanmai ,Nellore ,Pattiveeranpatti, ,Nellore, ,Dinakaran ,
× RELATED மதுரை வண்டியூர் கண்மாயை உரிய...