×

தமிழகத்தில் பொன்னுக்கு வீங்கி அதிகரிப்பு: ஆய்வில் தகவல், சிகிச்சை முறைகள் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் பொன்னுக்கு வீங்கி நோய் அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத்துறை மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மம்ப்ஸ் எனப்படும் வைரஸ் மூலம் பரவும் பொன்னுக்கு வீங்கி நோய் காதுகள் மற்றும் தாடைக்கு இடையே உள்ள பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. உமிழ்நீர் சுரப்பிகளில் அத்தகைய வீக்கம் உருவாவதால் கடுமையான வலி மற்றும் காய்ச்சல் ஏற்படக்கூடும். அதனுடன் தலைவலி, பசியின்மை, கன்னங்கள் வீங்குதல், சோர்வு உள்ளிட்ட அறிகுறிகளும் காணப்படலாம்.

இது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு கபம், சளி மற்றும் நெருக்கமான தொடர்பு மூலம் பரவும் வைரசால் ஏற்படுகிறது. பெரும்பாலும் இந்த தொற்றானது தானாகவே சரியாகிவிடும். அரிதாகச் சிலருக்கு இது மூளை காய்ச்சலாகவோ, விரை வீக்கமாகவோ தீவிரமாகலாம். தொற்று பாதிப்புக்குள்ளானவர்கள் உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நிறைய தண்ணீரும், திரவ உணவுகளும் எடுத்துக் கொள்ள வேண்டும். மருத்துவரின் பரிந்துரையின் பேரில் வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆரோக்கியமான உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். வேறு ஏதேனும் பிரச்னைகள், அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். இந்நிலையில் தமிழகத்தில் பொன்னுக்கு வீங்கி நோய் அதிகரித்து வருவதாக பொதுசுகாதாரத்துறை மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் பொன்னுக்கு வீங்கி நோய் பரவல் எவ்வாறு உள்ளது என ஆய்வு மேற்கொள்ள கடந்த 2021 ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை இந்த நோயால் பாதிக்கப்பட்ட விவரங்களை ஐஎச்ஐபி – ஐடிஎஸ்பி இணையத்தில் இருந்து சேகரித்து பொதுசுகாதாரத்துறை ஆய்வு மேற்கொண்டது.

கடந்த 3 ஆண்டுகளில் இந்த நோயால் மொத்தம் 1281 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 56.05 சதவீதம் பெண்களும், 43.87 ஆண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக அதிக அளவில் இந்த நோய் சென்னையில் (31 சதவீதம்) பதிவாகியுள்ளது. மேலும் கடந்த 2021ம் ஆண்டு ஒரு லட்சம் நபர்களில் 0.07 நபர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டு இருந்தனர், இது தற்போது 1.3 நபர்களாக அதிகரித்து உள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே வருங்காலங்களில் பொன்னுக்கு வீங்கி நோய் அதிகரிக்கும் எனவும் அதை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆய்வு மேற்கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

* கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2024ம் ஆண்டு மார்ச் மாதம் வரை பாதிக்கப்பட்டவர்களின் விவரம்:

வயது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சதவீதம்
5 வயதுக்குள் 418 பேர் 32.63
6 – 9 வயது 507 பேர் 39.58
10 – 19 வயது 132 பேர் 10.30
20 – 40 வயது 36 பேர் 2.81
41 – 60 வயது 139 பேர் 10.85
60 வயதுக்கு மேல் 49 பேர் 3.83

The post தமிழகத்தில் பொன்னுக்கு வீங்கி அதிகரிப்பு: ஆய்வில் தகவல், சிகிச்சை முறைகள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Public Health Department ,
× RELATED சென்னை மாநகராட்சியில் சுகாதார...