திருப்பதி : கீழ் திருப்பதியிலிருந்து பாதயாத்திரையாக திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் முக்கிய வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளது. உலக பிரசித்தி பெற்ற திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அதில் பெரும்பாலானோர் பாதயாத்திரை மூலம் வந்தடைகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள வேண்டுகோள் அறிவிப்பில்,” 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ஆஸ்துமா, வலிப்பு, மூட்டு பிரசசனைகள் உடையவர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாதயாத்திரை மூலம் வர வேண்டாம்.
மலையில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருக்கும் என்பதால், உடல் பருமனாக உள்ளவர்கள் மற்றும் இதய நோய்க்காரர்கள் மலைப்பாதையில் நடந்து செல்வது நல்லதல்ல. ஆகவே அவர்கள் வாகனங்களில் வந்து தரிசனம் செய்யலாம். பாத யாத்திரிகையாக வருவோருக்காக அலிபிரி மலைப்பாதையில் 1500-வது படி மற்றும் காலி கோபுரம், பாஷ்யகர்லா சன்னதி அருகே மருத்துவ உதவி மையம் உள்ளது.திருமலையில் உள்ள அஸ்வினி மருத்துவமனை மற்றும் பிற மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் மருத்துவ உதவி பெற்றுக் கொள்ளலாம்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மலையில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருப்பதால் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் பாதயாத்திரையில் வர வேண்டாம்: திருப்பதி தேவஸ்தானம் appeared first on Dinakaran.