×

மெரினாவில் போலீசாரை தரக்குறைவாக பேசிய விவகாரம் கைதான பெண் ஜாமீன் கேட்டு மனு

* கவுரவமான குடும்பத்தை சேர்ந்தவள் என கதறல், காவல்துறை பதில்தர அமர்வு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை மெரினாவில் மது அருந்திவிட்டு, காவல்துறையிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட பெண், ஜாமீன் கோரிய மனு குறித்து காவல்துறை பதிலளிக்குமாறு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மெரினா லூப் சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன், நள்ளிரவில் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்த காரை, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் எடுக்குமாறு கூறியபோது, அதில் இருந்த சந்திரமோகன் என்பவரும் அவரது தோழி தனலெட்சுமியும், மது போதையில் காவல் துறையினரை ஆபாசமாக திட்டி, மிரட்டல் விடுத்தனர்.

இதையடுத்து, மயிலாப்பூர் காவல்துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில், சந்திரமோகன் மற்றும் அவரது தோழி மீது ஆபாசமாக திட்டுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்தனர். இந்நிலையில், கைதான தனலெட்சுமி ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

அதில், தான் கவுரவமான குடும்பத்தை சேர்ந்தவர் எனவும், தன் மீது தவறாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், தவறுக்கு தான் மன்னிப்பு கோரியதாகவும் கூறியுள்ளார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, போலீஸ் தரப்பில் மாநகர குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஆஜராகி, இந்த மனுவுக்கு பதில்தர உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி, இந்த மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 28ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post மெரினாவில் போலீசாரை தரக்குறைவாக பேசிய விவகாரம் கைதான பெண் ஜாமீன் கேட்டு மனு appeared first on Dinakaran.

Tags : Marina ,Chennai ,Chennai Marina ,Dinakaran ,
× RELATED 150 கி.மீ தொலைவில் வரும் கப்பல், படகுகளை...