சென்னை: சென்னையில் 3 விமானங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக, இணையதளம் மூலம் மிரட்டல் வந்ததால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஆகாஷா விமான நிறுவனங்களின் அலுவலகங்களுக்கு நேற்று பகல் 12.30 மணி அளவில் மர்மமான முறையில், முகவரி இல்லாமல், டார்க் நெட் இணையதளம் மூலம், விமானங்களுக்கு வெடிகுண்டுகள் மிரட்டல்கள் வந்தன.
ஏர் இந்தியாவுக்கு வந்த மிரட்டல் மெயிலில், சிங்கப்பூரிலிருந்து 124 பயணிகளுடன், சென்னைக்கு வந்து கொண்டிருக்கும் ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், இண்டிகோ ஏர்லைன்ஸ் அலுவலகத்துக்கு வந்த மிரட்டல் மெயிலில், ஜெய்பூரில் இருந்து 146 பயணிகளுடன் வந்து கொண்டு இருக்கும் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாகவும், சென்னையில் இருந்து நேற்று பிற்பகல் 1.40 மணிக்கு, பெங்களூரு புறப்பட இருந்த ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும் மெயிலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தகவலறிந்த வெடிகுண்டு நிபுணர்கள், அதிரடிப்படை வீரர்கள், விமான பாதுகாப்பு படையினர், தீவிர நடவடிக்கைகளில் இறங்கினர். இந்நிலையில், சிங்கப்பூரிலிருந்து சென்னை வரும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் நேற்று பகல் 1.18 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பத்திரமாக வந்து தரையிறங்கியது. பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டதும், வெடிகுண்டு நிபுணர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி பரிசோதித்தனர். அப்போது, வெடிகுண்டுகள் எதுவும் இல்லை. எனவே அது புரளி என்று தெரிந்தது.
மேலும் ஜெய்ப்பூரில் இருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், பகல் 1.40 மணிக்கு சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல இருந்த ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானத்துக்குள்ளும் எந்த வெடிகுண்டுகளும் இல்லை என்றும், இது வெறும் புரளி என்றும் சோதனையில் தெரியவந்தது. சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 3 விமானங்களுக்கு டார்க் நெட் இணையதளம் மூலமாக மிரட்டல் விடுத்த மர்ம ஆசாமிகள் யார் என்று சென்னை விமான நிலைய போலீசார், சைபர் க்ரைம் போலீஸ் உதவியுடன் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை விமான நிலையம் மற்றும் விமானங்களுக்கு கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்களுடன் விமான நிலைய அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுவதும், ஆனால், வெடிகுண்டு ஏதும் சிக்காமல், அந்த மிரட்டல் வெறும் புரளி என்பதும் தெரிய வருகிறது. இதனால், விமான நிலைய வளாகம் பரபரப்பாக காணப்படுவதுடன், பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. தொடர் மிரட்டல் காரணமாக விமான நிலைய அதிகாரிகளும் விழிபிதுங்கி அவதிப்படும் நிலை உள்ளது.
The post சென்னை விமான நிலையத்தில் 3 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடர் சம்பவங்களால் விழிபிதுங்கும் அதிகாரிகள் appeared first on Dinakaran.