×
Saravana Stores

வண்டலூர் பூங்காவில் உள்ள குரங்கு குட்டியை கால்நடை மருத்துவரிடம் தர முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, நவ.15: தெரு நாய்களால் கடிபட்டு சிகிச்சைக்குப் பின், வண்டலூர் உயிரியல் பூங்காவில் சேர்க்கப்பட்டுள்ள குரங்கு குட்டியை கால்நடை மருத்துவரிடம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கால்நடை மருத்துவர் வல்லயப்பன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2023 டிசம்பர் 4ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் நாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாமில், நாய்களால் கடிபட்டு காயமடைந்த ஒரு குரங்கு குட்டியை வனத்துறை பாதுகாப்பாளர் ஒருவர் கொண்டு வந்தார். சுமார் 10 மாத சிகிச்சைக்கு பிறகு குணமடைந்த குரங்கு குட்டியை வனத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் 26ம் தேதி வாங்கி சென்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் விட்டு விட்டனர். அந்த குரங்கு குட்டிக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்க வாய்ப்புள்ளதால் குரங்கு குட்டி பூரணமாக குணமடையும் வரை தனது கட்டுப்பாட்டில் ஒப்படைக்க வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், குரங்கு குட்டியை பார்வையிட கால்நடை மருத்துவருக்கு அனுமதியளித்து உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கடந்த 9ம் தேதி கால்நடை மருத்துவர் வல்லயப்பன், தனது மகள் மற்றும் வழக்கறிஞருடன் சென்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள குரங்கு குட்டியை பார்வையிட்டனர். இந்த நிலையில், வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் முதன்மை தலைமை வனபாதுகாவலர் தரப்பில் வழக்கறிஞர் ஸ்ரீனிவாசன் தாக்கல் செய்த அறிக்கையில், தற்போது, குரங்கு குட்டிக்கு அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உரிய சிகிச்சையும், சிறந்த உணவும் அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்காக மட்டுமே குரங்கு குட்டி மனுதாரரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், ராணிப்பேட்டையில் இருந்து கோவைக்கு சட்டவிரோதமாக குரங்கை அவர் கொண்டு சென்றுள்ளார். அதிகாரிகள் குரங்கை சரணடையுமாறு தெரிவித்தும், மீண்டும் ஓசூருக்கு சட்டவிரோதமாக கொண்டு சென்றுள்ளனர்.

தமிழ்நாடு மாநில கால்நடை மருத்துவ கவுன்சிலின் இணையதளத்தை சரிபார்த்தபோது, மனுதாரர் பெயர் நீக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. எனவே, குரங்கு குட்டியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நீதிபதி, வண்டலூர் உயிரியல் பூங்காவில் சேர்க்கப்பட்டுள்ள குரங்கு குட்டியை கால்நடை மருத்துவரிடம் மீண்டும் ஒப்படைக்க முடியாது என்று மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அப்போது, மனுதாரர் தரப்பில், குரங்கு குட்டியை பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. அந்த கோரிக்கையையும் நீதிபதி நிராகரித்தார்.

The post வண்டலூர் பூங்காவில் உள்ள குரங்கு குட்டியை கால்நடை மருத்துவரிடம் தர முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Vandalur Park ,Chennai ,Madras High Court ,Vandalur Zoo ,Veterinarian ,Vallayappan ,Court ,High Court ,Dinakaran ,
× RELATED குரங்கை ஒப்படைக்கக் கோரிய மனு தள்ளுபடி