ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட மேம்பால கட்டுமான பணிகள், தற்போது ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால் நாள்தோறும் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில், கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இதனால் கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், பல இடங்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும், மேம்பாலம் கட்டுமான பணிகள் நடந்த பகுதிகளில், பல இடங்களில் மண் சரிந்தது. சர்வீஸ் சாலையிலும் மழைநீர் ஆறு போல் ஓடியது. இரவு 11 மணியளவில் ஓசூர் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் இரு மார்க்கத்திலும், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக, பல கிலோ மீட்டர் தூரத்திற்கு பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன.
இதனால் ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு 52 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க, பஸ்களுக்கு 3 மணி நேரத்திற்கும் மேல் ஆனது. புதன் இரவு 11 மணிக்கு தொடங்கிய போக்குவரத்து நெரிசல், வியாழக்கிழமை மாலை 4 மணி வரை 17 மணி நேரமாக குறையவில்லை. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.
The post ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் 17 மணி நேரம் டிராபிக் ஜாம்: பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் ஸ்தம்பிப்பு appeared first on Dinakaran.