புனே: இந்திய அணியுடனான 2வது டெஸ்டில், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 259 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அபாரமாகப் பந்துவீசிய வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். காயத்தால் அவதிப்படும் மேட் ஹென்றிக்கு பதிலாக மிட்செல் சான்ட்னர் சேர்க்கப்பட்டார். இந்திய அணியில் கே.எல்.ராகுல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ் நீக்கப்பட்டு கில்,வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப் இடம் பெற்றனர்.
டாம் லாதம், டெவன் கான்வே இணைந்து நியூசி. இன்னிங்சை தொடங்கினர். பும்ரா, ஆகாஷ் வேகப் பந்துவீச்சு பலனளிக்காததால் 8வது ஓவரிலேயே சுழல் தாக்குதலை கையில் எடுத்தார் ரோகித். அஷ்வின் வீசிய அந்த ஓவரின் 5வது பந்தில் லாதம் (15 ரன்) எல்பிடபுள்யு ஆகி வெளியேறினார். அடுத்து கான்வே – வில் யங் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 44 ரன் சேர்த்தனர். யங் 18 ரன் எடுத்து அஷ்வின் சுழலில் அவுட்டானார். கான்வே – ரச்சின் ரவிந்த்ரா ஜோடி பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. இருவரும் 3வது விக்கெட்டுக்கு 62 ரன் சேர்த்தனர்.
கான்வே 76 ரன் (141 பந்து, 11 பவுண்டரி) விளாசி அஷ்வின் சுழலில் விக்கெட் கீப்பர் பன்ட் வசம் பிடிபட்டார். முதல் 3 விக்கெட்டையும் அஷ்வின் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ரச்சின் – டேரில் மிட்செல் ஜோடி உறுதியுடன் விளையாடி 59 ரன் சேர்த்தது. அரை சதம் விளாசிய ரச்சின் 65 ரன் (105 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி வாஷிங்டன் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். ஓரளவு தாக்குப்பிடித்த மிட்செல் 18, சான்ட்னர் 33 ரன் எடுத்து வாஷிங்டன் சுழலில் பலியாகினர். மற்ற வீரர்கள் வாஷிங்டன் மாயாஜாலத்தை சமாளிக்க முடியாமல் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுக்க… நியூசிலாந்து 79.1 ஓவரில் 259 ரன் குவித்து ஆல் அவுட்டானது.
இந்திய பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தர் 23.1 ஓவரில் 4 மெய்டன் உள்பட 59 ரன் விட்டுக்கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தினார். டெஸ்ட் போட்டிகளில் இது அவரது சிறந்த பந்துவீச்சாக அமைந்தது. அஷ்வின் 24 ஓவரில் 2 மெய்டன் உள்பட 64 ரன்னுக்கு 3 விக்கெட் கைப்பற்றினார். அடுத்து களமிறங்கிய இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 16 ரன் எடுத்துள்ளது. கேப்டன் ரோகித் டக் அவுட்டானார். ஜெய்ஸ்வால் 6, கில் 10 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.
The post புனேவில் 2வது டெஸ்ட் நியூசிலாந்து 259 ரன்னில் சுருண்டது: வாஷிங்டன் விக்கெட் வேட்டை appeared first on Dinakaran.