×
Saravana Stores

மெட்ரோ 2ம் கட்ட திட்டத்தில் நாளை தானியங்கி மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்: அதிகாரிகள் தகவல்

சென்னை: பூந்தமல்லியில் உள்ள மெட்ரோ பணிமனையில் தானியங்கி மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் நாளை நடைபெற உள்ளதாக மெட்ரோ நிர்வாக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். சென்னை2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இரண்டாம் கட்ட வழித்தடத்தில் ஓட்டுனர் இல்லாமல் தானியங்கி முறையில் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 36 மெட்ரோ ரயில்களை (மொத்தம் 108 பெட்டிகள்) வழங்குவதற்கான ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா என்ற நிறுவனத்திற்கு ரூ.1,215.92 கோடியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கியது.

இதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 8ம் தேதி ரயில் பெட்டிகளை தயாரிக்கும் பணியை இந்த நிறுவனம் தொடங்கியது. அதன் பிறகு முதல் ரயிலை கடந்த செப்டம்பர் 22ம் தேதி தயாரித்து முடித்ததாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் ஓட்டுநர் அல்லாத முதல் மெட்ரோ ரயிலை பூந்தமல்லியில் உள்ள மெட்ரோ பணிமனையில் சோதனை ஓட்டத்திற்காக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கொண்டு வந்துள்ளனர். மேலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மூன்று பெட்டிகள் அடங்கிய முதல் ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் நாளை (26ம் தேதி) தொடங்க உள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மெட்ரோ அதிகாரிகள் கூறியதாவது: அடுத்தாண்டு ஜனவரி இறுதிவரை கிட்டத்தட்ட மூன்று மாத காலம் மெட்ரோ பணிமனையில் 900 மீட்டருக்கு அமைக்கப்பட்டுள்ள Test Driving Track-ல் வைத்து பல்வேறு சோதனைகள் நடத்தப்பட உள்ளது. தொடர்ந்து அடுத்த 6 மாத காலம் பூந்தமல்லி முதல் போரூர் வழியாக கலங்கரை விளக்கம் வரை செல்லும் பிரதான வழிதடத்தில் குறிப்பிட்ட சில கி.மீ தூரத்திற்கு சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. பூந்தமல்லி மெட்ரோ பணிமனையில் நடைபெற உள்ள சோதனை ஓட்டத்தில் சிக்னல், பிரேக் பாயிண்ட், பயணிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் சோதனைகள் நடைபெற உள்ளது.

The post மெட்ரோ 2ம் கட்ட திட்டத்தில் நாளை தானியங்கி மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Poontamalli ,Dinakaran ,
× RELATED மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்தில்...