சென்னை: மழை வெள்ள பாதிப்பு குறித்து குற்றம் சொல்லும் எடப்பாடி, மக்களுக்கு என்ன செய்தார்? அவர் ஆறுதலும் கூறவில்லை, நிவாரணமும் கொடுக்கவில்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார். அந்த வகையில் புளியந்தோப்பு கன்னிகாபுரம், டாக்டர் அம்பேத்கார் சாலையில் உள்ள விளையாட்டு மைதானம், பட்டாளம் நவீன சலவைக்கூடம், புதிதாக கட்டப்பட்டு வரும் திருவிக நகர் பேருந்து நிலையம் மற்றும் அகரம் ஜெகநாதன் தெருவில் பெண்களுக்காக புதிதாக கட்டப்பட்டு வரும் கோ ஒர்க்கிங் பிளேசை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது திரு.வி.க.நகர் எம்எல்ஏ தாயகம் கவி, வீட்டு வசதித்துறை செயலாளர் காகர்லா உஷா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தில் மட்டும் ரூ.668 கோடி செலவில் 28 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பூங்கா மேம்பாடு, பேருந்து நிலையம் மேம்பாடு, சந்தை மேம்பாடு, பள்ளி மேம்பாடு உள்ளிட்ட 28 பணிகள் நடைபெற்று வருகின்றன. சிறுசிறு குறைகளை சரிசெய்து அந்த பணிகளுக்கு அரசாணைகளும் போடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. சிறுமழைக்கே சென்னை தத்தளிக்கிறது என எடப்பாடி கூறுகிறார்.
மழை வெள்ளத்தின்போது குற்றம்சொல்லும் அவர் எந்த இடத்தில் மழை வெள்ளத்தை பார்வையிட்டார்? பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த இடத்தில் ஆறுதல் கூறினார்? இயக்கத்தின் சார்பில் எந்த இடத்திலாவது நிவாரணம் வழங்கினாரா? மழைவிட்டவுடன் 5 மணி நேரத்தில் 95 சதவீதம் மழை நீர் வடிந்துவிட்டது. எதிர்க்கட்சியினர் வசைபாடுகளை தொடர்ந்து நடத்திக் கொண்டுதான் இருப்பார்கள். நாங்கள் மக்கள் பணிகளை தொடர்ந்து செய்வோம். கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒவ்வொரு நாளும் விற்பனையாகாத கழிவுப்பொருட்கள் எவ்வளவு?, எந்த நேரத்தில் தேங்குகிறது என்பதை கணக்கிட முடியாத நிலை உள்ளது. இந்த பிரச்னையை சரி செய்ய அதிக கவனம் செலுத்தி வருகிறோம். இன்னும் கோயம்பேடு அங்காடி பகுதிகள்மீது அதிக கவனம் செலுத்துவோம். வரும் காலங்களில் இது போன்ற புகார்களே இல்லா வண்ணம் பார்த்துக் கொள்கிறோம் என்றார்.
The post ஆறுதலும் கூறவில்லை, நிவாரணமும் கொடுக்கவில்லை வெள்ள பாதிப்பு குறித்து குற்றம் சொல்லும் எடப்பாடி, மக்களுக்கு என்ன செய்தார்? அமைச்சர் சேகர்பாபு கேள்வி appeared first on Dinakaran.