×
Saravana Stores

மகாராஷ்டிரா, ஜார்கண்ட் தேர்தல் முடிந்த பின் டிச. 2வது வாரத்தில் பாஜகவுக்கு புதிய தேசிய தலைவர்?: தென் மாநிலத்தை சேர்ந்த ஒருவரை தேர்வு செய்ய முடிவு

புதுடெல்லி: மகாராஷ்டிரா, ஜார்கண்ட் தேர்தல் முடிந்த பின் டிச. 2வது வாரத்தில் பாஜகவுக்கு புதிய தேசிய தலைவர் தேர்வு ெசய்யப்படுவார் என்றும், தென் மாநிலத்தை சேர்ந்த ஒருவரை தேர்வு செய்ய ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பாஜக தேசிய தலைவராக இருக்கும் ஜே.பி.நட்டா, மோடி தலைமையில் 3வது முறையாக ஆட்சி அமைந்த பின்னர் ஒன்றிய அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஜே.பி.நட்டாவின் பாஜக தலைவர் பதவி கடந்தாண்டு ஜனவரி 20ம் தேதி முடிந்துவிட்டது.

ஆனால் மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு அவரது பதவி இந்தாண்டு ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. மக்களவை தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், இன்னும் புதிய தலைவரை நியமிக்கப்படவில்லை. ஆரம்பத்தில் இப்பதவிக்கு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தர்மேந்திர பிரதான், மத்திய பிரதேசத்தை சேர்ந்த சிவ்ராஜ் சிங் சவுகான் ஆகியோர் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றதால் ஒன்றிய அமைச்சர்களாகிவிட்டனர்.

அதனால் பாஜகவின் அடுத்த தேசிய தலைவர் யார்? எப்போது தேர்வு செய்யப்படுவார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் ஜம்மு – காஷ்மீர், அரியானா பேரவை தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநில தேர்தல்களுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மேலும் பாஜகவில் தேசிய அளவிலான உறுப்பினர்கள் சேர்க்கையும் நடைபெற்று வருகிறது. அதேபோல் மாநில அளவிலான உட்கட்சி தேர்தல் பணிகளை வரும் டிசம்பர் முதல் வாரத்திற்குள் முடிக்க தேசிய தலைமை உத்தரவிட்டுள்ளது. எனவே மாநில அளவிலான நிர்வாகிகள் தேர்வு முடிந்த பின்னர், தேசிய தலைவரை தேர்வு செய்வார்கள் என்பது தெளிவாகிறது.
இதுகுறித்து தேசிய தலைமை மூத்த நிர்வாகிகள் கூறுகையில், ‘மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டசபை தேர்தல்களுக்கு பிறகு, பாஜகவின் உட்கட்சி அமைப்பு தேர்தல் திட்டம் விரைவுபடுத்தப்படும்.

பூத், மண்டலம், மாவட்டம் மற்றும் மாநில அமைப்பு தேர்தல்கள் டிசம்பர் முதல் வாரத்தில் நிறைவடையும். இதன் பின்னர் தேசிய தலைவர் தேர்தல் நடைபெறும். பாஜகவின் கொள்கைபடி, நாடு முழுவதும் பாதி மாநிலங்களில் உட்கட்சி தேர்தல் முடிந்த பிறகு தேசியத் தலைவர் தேர்தல் நடத்தப்படலாம். இதுபோன்ற சூழ்நிலையில், 50 சதவீத மாநிலங்களில் தேர்தல் நடத்திய பின்னர், கட்சியின் தேசிய தலைவரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கும்.

இதற்கிடையே டில்லி சட்டசபை தேர்தல் வரும் ஜனவரியில் துவங்க உள்ளதால், அதற்கு முன்னதாக புதிய தேசிய தலைவரை தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. தென்மாநிலத்தை சேர்ந்த ஒருவரை தலைவராக்க ஆலோசனைகள் நடந்து வருகின்றன. அதேநேரம் தேசிய தலைவர் பதவிக்கான பட்டியலில், மனோகர்லால் கட்டார், தேவேந்திர பட்னாவிஸ், தர்மேந்திர பிரதான், ஜி.கிஷன் ரெட்டி, சிவராஜ் சிங் சவுகான், நரேந்திர சிங் தோமர் போன்றவர்கள் பெயரும் உள்ளது. எனவே டிசம்பர் 2வது வாரத்தில் பாஜகவின் புதிய தேசிய தலைவர் தேர்வு செய்யப்படுவார்’ என்று கூறினர்.

The post மகாராஷ்டிரா, ஜார்கண்ட் தேர்தல் முடிந்த பின் டிச. 2வது வாரத்தில் பாஜகவுக்கு புதிய தேசிய தலைவர்?: தென் மாநிலத்தை சேர்ந்த ஒருவரை தேர்வு செய்ய முடிவு appeared first on Dinakaran.

Tags : Maharashtra ,Jharkhand ,BAJGAV ,SOUTHERN STATE ,New Delhi ,Bajhav ,JJ ,BJP ,B. Nata ,southern ,Dinakaran ,
× RELATED மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல்...