×

அதிமுக ஆட்சியில் குரூப்-1 தேர்வில் முறைகேடு 4 பல்கலைக்கழக பதிவாளர்கள் எதிர் மனுதாரர்களாக சேர்ப்பு

* ஆவணங்களை தராவிட்டால் சோதனை செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சக்திராவ், அதிமுக ஆட்சியில் 2019ல் நடந்த குரூப் 1 தேர்வில் தமிழ் வழி ஒதுக்கீட்டிற்கான சலுகையை பலர் தவறாக பயன்படுத்தியது தொடர்பாக நீதிமன்ற உத்தரவை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நேற்று மீண்டும் விசாரித்த நீதிபதிகள் பி.வேல்முருகன், பி.புகழேந்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம், மெட்ராஸ் பல்கலைக்கழகங்களில் படித்தவர்கள், தேர்வு எழுதியவர்கள், வெற்றி பெற்றவர்கள், சான்றிதழ் பெற்றவர்கள் குறித்த விவரங்கள் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை. மாணவர்களின் அடையாள அட்டை, விண்ணப்ப படிவம், உள்ளிட்ட அடிப்படை விவரங்களைக் கூட பல்கலைக்கழகங்கள் கடந்த 2 ஆண்டுகளாக விசாரணைக்கு தராமல் இழுத்தடித்து காலம் தாழ்த்தி வருகின்றன.

எனவே, இந்த பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்படுகின்றனர். இதுதொடர்பாக அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. லஞ்ச ஒழிப்புத்துறையினர் இந்த உத்தரவின் பேரில் தேவையான ஆவணங்களை பெற ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும். விசாரணைக்குத் தேவையான அனைத்து விவரங்களையும் சேகரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மேலும் கால அவகாசம் வழங்க முடியாது. போலி சான்று வழங்க உதவியவர்கள், சான்று பெற்ற குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கில் செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

எனவே, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை விரிவுபடுத்தவும், ஆவணங்களை மறைத்து குற்றவாளிகளை பாதுகாப்பவர்களையும் வழக்கில் சேர்க்க விசாரணை அமைப்பிற்கு அனுமதி வழங்கப்படுகிறது. பல்கலைக்கழகங்கள் தரப்பில் உரிய ஆவணங்களைத் தர தாமதித்தால், லஞ்ச ஒழிப்புத்துறை சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று, சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றலாம். வழக்கின் விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தற்போதைய நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டு விசாரணையை அக். 28க்கு தள்ளி வைத்தனர்.

The post அதிமுக ஆட்சியில் குரூப்-1 தேர்வில் முறைகேடு 4 பல்கலைக்கழக பதிவாளர்கள் எதிர் மனுதாரர்களாக சேர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Sakthi Rao ,Tirumangalam, Madurai district ,Dinakaran ,
× RELATED மாடுகள் சாலைகளில் திரிந்தால் பறிமுதல்: மாநகராட்சி அதிரடி அறிவிப்பு