×
Saravana Stores

திமுக ஆட்சியில் நாமக்கல் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

நாமக்கல்: திமுக ஆட்சியில் நாமக்கல் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் ரூ.810 கோடியில் முடிவுற்ற திட்ட பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். பின்னர் பொம்மை குட்டைமேட்டில் பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் முதல்வர் பேசியதாவது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக நாமக்கல் மாவட்டம் உள்ளது. பொருளாதாரத்தை வளர்க்கும் தோழிகள் நிறைந்த பூமி நாமக்கல். மற்ற ஆட்சியர்களுக்கு எடுத்துக்காட்டாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா விளங்கி கொண்டிருக்கிறார்.

கல்லூரியில் பயிலும் மாணவிகள் புதுமை பெண் திட்டம் மூலம் ரூ.1000 உதவித் தொகை பெறுவதில் நாமக்கல் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் அதிக மாணவர்கள் பயன்பெறும் மாவட்டத்தில் நாமக்கல் 2-வது இடத்தில் உள்ளது. நாமக்கல் மாவட்டத்துக்கு ஏராளமான திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்துவிட்டுதான் உங்கள் முன் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறேன்.

மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நாமக்கல்லுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.10 கோடி நிதி வழங்கப்படும். சேந்தமங்கலம் கொல்லிமலை பகுதியில் விளையக்கூடிய பழங்கள் மற்றும் காய்கறிகளை பதப்படுத்தி விற்பனை செய்ய குளிர்பதனக் கிடங்கு வசதியுடன் கூடிய வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்கப்படும். மோகனூரில் இருக்கும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை, மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையென பெயரிடப்பட்டு, இந்த ஆலையின் எத்தனால் உற்பத்தி அலகு ரூ.4 கோடியில் மேம்படுத்தப்படும். நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு ரூ.30 கோடி மதிப்பீட்டில் தார்ச் சாலை அமைக்கப்படும்.

கடந்த சில நாட்களாக, மூன்றாண்டுகளாக நமது ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், நிறைவேற்றப்பட்டுள்ள பணிகள் நடைபெற்று வரும் பணிகள் குறித்து துறைவாரியாக ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறேன். வருகிற நவம்பர் மாதம் தொடங்கி, எல்லா மாவட்டங்களிலும் நடைபெற்று வரும் பணிகளை நேரடியாக கள ஆய்வு செய்யப் போகிறேன். அதனால் தான் சொல்கிறேன், நமது திராவிட மாடல் ஆட்சியில் அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும். அனைத்து வழிகளிலும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் சென்று சேர்கிறது.

அருந்ததியர் உள்ஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வந்தவன் என்ற முறையில் பெருமை அடைகிறேன். கலைஞர் வழங்கிய 3 சதவீதம் அருந்ததியர் உள் ஒதுக்கீட்டால் கடந்த 15 ஆண்டுகளாக அவர்களது வாழ்வு மேம்பட்டுள்ளது.

திமுகவுக்கு செல்வாக்கு அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தல்,நாடாளுமன்றத்தேர்தலில் திமுகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் மாபெரும் வெற்றி பெறுவோம்

எடப்பாடி பழனிச்சாமி இந்த உலகத்தில் இருக்கிறாரா அல்லது கனவு உலகத்தில் இருக்கிறாரா என தெரியவில்லை. நான் முதல்வர் திட்டத்தின் மூலம் 30 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளார்களே அதில் உள்ளது திமுகவின் மதிப்பு. எடப்பாடி பழனிச்சாமி பேச்சை காமெடி போல நினைத்து கொள்ள போகிறார்கள். அதிமுகவின் கோட்டை என்று சொல்லப்படும் மேற்கு மாவட்டங்களிலேயே நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிதான் அதிக இடங்களை கைப்பற்றியது.

திமுக ஆட்சியின் மதிப்பு சரியவில்லை; அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் மதிப்பையே எடப்பாடி பழனிசாமி அடமானம் வைத்தார். ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே எடப்பாடி பழனிசாமி கவனம் செலுத்தியதால், அதிமுகவின் செல்வாக்கும் சரிந்துவிட்டது. மக்களோடு மக்களாக இருந்து மக்களுக்காக உழைத்துக் கொண்டிருப்பதால்தான் தொடர்ந்து வெற்றி அடைந்துள்ளோம்.

இந்தியத் துணைக் கண்டத்துக்கே வழிகாட்டும் நம்ம திராவிட மாடல் ஆட்சியால், தொடர்ந்து தமிழ்நாட்டை தலைநிமிர்ந்து நடைபோட வைப்போம். அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உயர்த்துவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவில் உரையாற்றியுள்ளார்.

The post திமுக ஆட்சியில் நாமக்கல் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Tags : NAMAKAL MUNICIPALITY ,DIMUKA ,MINISTER ,MU K. Stalin ,NAMAKAL ,M.D. ,K. Stalin ,Namakkal district ,Namakkal Municipality ,Chief Minister ,MLA K. Stalin ,Dinakaran ,
× RELATED சாதி வாரி கணக்கெடுப்பு விவகாரத்தில்...