×

அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு; மும்பை தாக்குதல் தீவிரவாதி ராணாவை நாடு கடத்த உத்தரவு: விரைவில் இந்தியா அழைத்து வர ஏற்பாடு

கலிபோர்னியா: மும்பை தாக்குதல் தீவிரவாதியை நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவரை விரைவில் இந்தியா அழைத்து வர ஏற்பாடுகள் நடக்கின்றன. கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பாக கடந்த 2009ம் ஆண்டு கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான பாகிஸ்தானில் பிறந்த கனடா தொழிலதிபர் தஹாவூர் ராணா என்பவர், தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் சிறையில் உள்ளார். மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் கோல்மேன் ஹெட்லியின் நெருங்கிய நண்பரான தஹாவூர் ராணா மீது அமெரிக்க நீதிமன்றமும் வழக்கு பதிவு செய்துள்ளது. மும்பை தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட 166 பேரில் 6 அமெரிக்க குடிமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே மும்பை தீவிரவாத குற்றவாளி தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அமெரிக்க நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அதற்காக இந்தியா-அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் தகவல் பரிமாற்றங்கள் செய்துள்ளன. அமெரிக்க நீதிமன்றத்தின் ெதாடர் விசாரணைக்கு பின்னர், தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க சட்டத் தடை ஏதுமில்லை என்று அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் அமெரிக்கா – இந்தியா இடையிலான கைதிகள் ஒப்படைப்பு ஒப்பந்தத்தின் கீழ் இது சாத்தியம் என்று தீர்ப்பளித்துள்ளது.

முன்னதாக கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தஹாவூர் ராணா மேல்முறையீட்டு நீதிமன்றத்தை அணுகினார். தற்போது மேல்முறையீட்டு நீதிமன்றம் தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான உத்தரவை வழங்கியுள்ளதால், விரைவில் தஹாவூர் இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கான நடைமுறைகளை இந்திய அதிகாரிகள் அமெரிக்காவிடம் ஒப்படைப்பார்கள் என்றும், அதனால் விரைவில் தஹாவூர் ராணா இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டு விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு; மும்பை தாக்குதல் தீவிரவாதி ராணாவை நாடு கடத்த உத்தரவு: விரைவில் இந்தியா அழைத்து வர ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : US ,Mumbai ,Rana ,India ,California ,
× RELATED அமெரிக்க நீதித்துறை பிடிவாரன்ட்...