டெல்லி: விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுபவர்கள் யார் என கண்டுபிடித்து அவர்கள் விமானத்தில் செல்ல தடை விதிக்கும் வகையில் ‘NO FLY LIST’ல் சேர்க்க சட்டத்திருத்தம் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களுக்கு அதிவெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் கடந்த 19-ம் தேதி சுமார் 30 விமானங்கள் உட்பட, கடந்த ஒரு வாரத்தில் 41 விமான நிலையங்களில் 90-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்ட சம்பவம் பயணிகள் இடையே பதற்றத்தையும், பாதுகாப்பற்ற மனநிலையையும் ஏற்படுத்தியுள்ளன.
இவற்றில் பெரும்பாலான மிரட்டல்கள் சமூக வலைதளங்கள் மற்றும் மின்னஞ்சல் வழியே விடுக்கப்பட்டவையாகும். அவை புரளி என கண்டறியப்பட்டாலும், அட்டவணை மாற்றம், திருப்பிவிடப்படுவது,விமான ரத்து என விமான சேவை சிரமத்துக்குள்ளாகிறது. சில நேரங்களில் மிரட்டல் விடுபவர்கள் அந்த விமானத்தில் செல்லவிருந்த பயணிகளாகவும் இருக்கின்றனர். இது தொடர்பாக கடந்த வாரம் 17 வயது சிறுவன் பிடிபட்ட நிலையில், மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
அந்தவகையில் மிரட்டல் விடுப்போருக்கு எதிராக பயணத்தடை உள்ளிட்ட பல்வேறு சட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக ஒன்றிய சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு கூறியுள்ளார்
இது தொடர்பாக அமைச்சர் கூறியதாவது:
தொடரும் மிரட்டல்களை கட்டுப்படுத்த விமானப்போக்குவரத்து விதிகளில் திருத்தம் செய்யவும், சிவில் விமானப் போக்குவரத்துச் சட்டம் 1982-ல் திருத்தங்களை மேற்கொள்ளவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த மிரட்டல்களின் பின்னணியில் சதி உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடந்துவருகிறது. இதுபோன்ற மிரட்டல்களை விடுக்கும் நபர்கள் அடையாளம் காணப்பட்ட பிறகு, அவர்கள் இனி விமானத்தில் செல்ல தடை விதிக்கும் வகையில் ‘NO FLY LIST’ல் சேர்க்க சட்டத்திருத்தம் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
The post விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் NO-Fly லிஸ்ட்டில் சேர்க்க திட்டம்: ஒன்றிய அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.