×

செங்கல்பட்டில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார். செங்கல்பட்டு மாவட்ட கலொக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு வகைப்பட்ட 300 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

மேலும், இந்த கூட்டத்தில், திருக்கழுக்குன்றம் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியை மாவட்ட கலெக்டர் உங்கள் ஊரில் உங்களைத் தேடி என்ற திட்டத்தில் ஆய்வு மேற்கொண்டபோது, மாணவர்கள் விளையாட்டு உபகரணங்களை வழங்கிட கோரிக்கை வைத்ததை தொடர்ந்து, மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக கேரம் போர்டு, செஸ், வாலிபால், கால்பந்து, கிரிக்கெட் மட்டைகள் போன்ற விளையாட்டு உபகரணங்களையும் அப்துல் கலாம், இறையன்பு ஆகியோரின் புத்தகங்களையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

இதனை தொடர்ந்து, 2023 – 24 கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு கல்வி பயின்று பொது தேர்வு எழுதி முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ – மாணவிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 16 பயனாளிகளுக்கு தலா ரூ.5979/ வீதம் ரூ.95,664 மதிப்பீட்டில் விலையில்லா தையல் இயந்திரங்களையும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.17000 வீதம் ரூ.1.70 லட்சம் மதிப்பீட்டில் ஈமச்சடங்கிற்கான உதவித்தொகையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

மேலும், செங்கல்பட்டு தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகம் சார்பில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் மூலம் 4 பயனாளிகளுக்கு ரூ.82,400 மதிப்பீட்டில் கல்வி உதவித்தொகை, 3 பயனாளிகளுக்கு தலா ரூ.20,000 வீதம் ரூ.60 ஆயிரம் மதிப்பீட்டில் திருமண உதவித்தொகை, 3 பயனாளிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.55,000 வீதம் ரூ.1.65 லட்சம் மதிப்பீட்டில் இயற்கை மரண உதவித்தொகை ஆகியவற்றை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 2 அரசு மருத்துவமனைகளுக்கும் மற்றும் 2 தனியார் மருத்துவமனைகளுக்கும் மாவட்ட ஆட்சி தலைவர் நற்சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார். மேலும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற்று பயனடைந்த 5 பயனாளிகளுக்கு பரிசு பொருட்களையும், புதியதாக விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் பதிவு செய்த 5 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் காப்பீடு திட்ட அடையாள அட்டைகளையும், இத்திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 10 பயனாளிகளுக்கு நற்சான்றிதழ் மற்றும் கேடயங்களையும், சுகாதாரம் சம்பந்தமாக சிறப்பாக ஓவியம் வரைந்த 3 மாணவர்களுக்கு பரிசுகளையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

இந்த குறை தீர்வு நாள் கூட்டத்தில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அறிவுடைநம்பி, மாவட்ட வழங்கல் அலுவலர் சாகிதா பர்வீன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) நரேந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (ஊரக வளர்ச்சி) வரதராஜன், உதவி ஆணையர் (கலால்) ராஜன் பாபு, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் கதிர்வேலு, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பரிமளா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபாண்மையினர் நல அலுவலர் வேலாயுதம், மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post செங்கல்பட்டில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.

Tags : People's Grievance Redressal Day ,Chengalpattu ,District Collector ,Arunraj ,People's Grievance Meeting ,Dinakaran ,
× RELATED மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் ₹57...